( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை நேற்று முன்தினம்(19) செவ்வாய்க்கிழமை பண்டத்தரிப்பிலிருந்து முன்னோடி பயணமாக ஆரம்பமானது .
ஜெயாவேல்சாமி தலைமையிலான இப் பாதயாத்திரை, மூத்த முருக பக்தர் துரைச்சாமி அடியார் வேண்டுகோளுக்கிணங்க, பண்டத்தரிப்பு பிரான்பற்று பெரிய வளவு முருகன் ஆலயத்திலிருந்து 45 அடியார்களுடன் ஆரம்பமானது .
அன்றிரவு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்தனர்.
நேற்று(20) புதன்கிழமை மாவிட்ட புரம் ஊடாக மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர் .
இன்று தொண்டமானாறு அக்கரை நாக பூசணி அம்மன் ஆலயத்தை அடைந்து நாளை வெள்ளிக்கிழமை (22) காலை செல்வச் சந்நிதி ஆலயத்தை ஆலயத்தை சென்றடைவர்.
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து 2026.05.23 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை கதிர்காம பாதயாத்திரை முறைப்படி விசேட பூஜைகள் சகிதம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
அதன்போது, மேலும் நூறு அடியார்கள் இப் பாரிய பாதயாத்திரையில் இணைந்து கொள்வர்.
இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரையாகக் கருதப்படும் இப்புனிதப் பயணம், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களை இணைத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக இடம்பெறுகிறது.
55 நாட்கள் கால்நடைப் பயணமாக, 108 ஆலயங்களைத் தரிசித்து, சுமார் 815 கிலோமீற்றர் தூரம் நடந்து கதிர்காம முருகனை தரிசிக்கும் இப்புனித யாத்திரை, இலங்கையின் மிக நீண்ட தூர பாதயாத்திரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பக்தி, ஒழுக்கம், தியாகம் மற்றும் இறைநம்பிக்கையின் வெளிப்பாடாக அமையும் ஜெயாவேல் சாமி தலைமையில் வரும் இப் பாதயாத்திரையில், இடையில் இணைய இருக்கும் அடியார்கள் தங்களது விபரங்களை பதிவு செய்ய ஜெயாவேல் சாமி
0763084791
0762594023
0776811875 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.
