நாட்டில் தற்போது எரிபொருள் விலைகளை குறைக்கும் சாத்தியம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இலங்கையில் உள்ள தற்போதைய எரிபொருள் கையிருப்பு எதிர்வரும் ஜூலை மாதம் வரை போதுமானதாக இருப்பதுடன், செப்டம்பர் மாதம் வரையிலான எரிபொருள் இறக்குமதிக்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தகவல்களை கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உலகளாவிய யுத்த சூழ்நிலையால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்வடைந்துள்ள போதிலும், மாதாந்திர விலை திருத்த நடைமுறையைத் தவிர மேலதிக விலை அதிகரிப்பு அல்லது மாற்றம் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் எரிபொருள் விலை சற்று குறைந்திருந்தாலும், மே 13ஆம் திகதி நிலவரப்படி டீசல் பேரல் ஒன்றின் விலை 154 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது என தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு முன்னர் உலக சந்தையில் ஒரு பேரல் எரிபொருளின் சுட்டெண் விலை 70 முதல் 90 டொலர் வரையிலேயே காணப்பட்ட நிலையில், தற்போது அது கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.