கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபர்

பாறுக் ஷிஹான்


நீண்ட காலமாக  சூட்சுமமாக  கடல் மற்றும் தரை வழியாக  ஐஸ் மற்றும் ஹெரோயின்  போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (09 )இரவு அம்பாறை மாவட்டம் காரைதீவு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில்  இடம்பெற்ற  சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரண்டு   சந்தேக நபர்களையும்   அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  கே.ஏ.எம்.பிரியங்கர  தலைமையிலான குழுவினரால்   கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் கைதான சந்தேக நபர்களில்  கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபரிடம்   இருந்து   50 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மற்றுமொரு சந்தேக நபரிடம் இருந்து 20 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் 250 மில்லி கிராம்  ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

குறித்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள் 80 ஆயிரம் ரூபா பணம் இலத்திரனியல் தராசு நவீன கைத்தொலைபேசிகள் என்பன சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும்    D.C.D.B என அழைக்கப்படும்   அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு பிரிவு    உப பொலிஸ் பரிசோதகர்  கே.ஏ.எம்.பிரியங்கரவிற்கு     கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஐஸ்  ஹெரோயின் போதைப்பொருட்கள்  கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது 40 மற்றும் 31  வயது மதிக்கத்தக்க குறித்த இரு சந்தேநபர்களில் ஒருவர் தலைமுடி வெட்டும் தொழில் செய்பவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.இச்சந்தேதக நபர்கள் புத்தளம், மன்னார் மாவட்டங்களில் இருந்து தரை மற்றும் கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என விசாரணை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேக நபர்கள் காரைதீவு பகுதியில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றினை பெற்று இக்கடத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை  மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்  கைதான இரு சந்தேக நபர்களும் முரணான வாக்குமூலங்களை ஏற்கனவே  பொலிஸாருக்கு வழங்கி விசாரணைகளை திசை திருப்ப முயன்றுள்ளதாக     எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

அத்துடன் கைதான சந்தேக நபர்கள் மற்றும் சான்றுப்பொருட்கள் யாவும் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்  1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில்  அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  கே.ஏ.எம்.பிரியங்கர  தலைமையிலான குழுவினரால்   இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.