10 மே 2026
மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய்
முதலமைச்சர் – தமிழ் நாடு
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,
ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் கோரிக்கை!

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரிய சாதனையை முதற்தடவையிலேயே நிலைநாட்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தாங்கள் பதவியேற்றுள்ளமையையிட்டு தமிழ்த் தேசிய பேரவையினராகிய நாம் மீளவும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்று நிற்கும் தங்களுக்குள்ள பாரிய பணிச்சுமைகளுக்கு மத்தியில் எமது கீழ்வரும் கோரிக்கையையும் கவனத்திற் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுநிற்கின்றோம்.
சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை நினைவுகூரும் வகையில், கடந்த 2009 ற்குப் பின்னர் ஆண்டுதோறும் மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக” ஈழத்தமிழ் மக்கள் பிரகடனம் செய்து, அந்நாளில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரமாக ஒன்றுகூடி நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

ஈழத்தமிழ் மக்களது மேற்படி நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த அனைத்துக் கட்சிகளதும் ஆதரவுடன் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு என்றும், அதற்குச் சர்வதேச குற்றவியில் விசாரணை அவசியம் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்நேரத்தில் தங்களது கட்சி நிறுவப்பட்டிருக்கவில்லையாயினும், அதன் பின்னர் தமிழக வெற்றிக்கழகம் தோற்றம் பெற்று, அதன் முதலாவது தேர்தலில் பெருவெற்றியீட்டி தாங்கள் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளீர்கள். இந்நிலையில் தாங்களும் தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கமும் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு அதற்குச் சர்வதேச குற்றவியில் விசாரணை அவசியம் என்ற அதே நிலைப்பாட்டிலே மிகவும் இறுக்கமாகவும் உறுதியாகவும் பயணிப்பீர்கள் என்ற செய்தியை அனைத்துத் தரப்புகளுக்கும் வழங்கும் வகையில், மேற்படி 2013 ஆம் ஆண்டு சட்டசபைத் தீர்மானத்தையொட்டிய ஓர் தீர்மானத்தை, இம் மே மாதத்தில் கூடும் தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே தங்களது தலைமையில் நிறைவேற்றுவது ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்துவதாக அமையும்.

அதன் மூலம், ஈழத் தமிழினம் மீது நீங்கள் காட்டும் அக்கறையானது, கொடிய இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமையும் என்பதுடன் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர் இதயங்களில் நீங்காத இடத்தை தங்களுக்கு வழங்கும் என்பதையும் தெரிவித்து, மீண்டும் எமது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர் – தமிழ்த் தேசியப் பேரவை
தொலைபேசி எண்: 0094777301021 மின்னஞ்சல்: [email protected]