இம்முறை உயர்தரத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தயாராகும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அரச வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, அரச சேவையின் மூலம் சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவ சேவைகளை வழங்கும் அரச வேலைவாய்ப்புகள் தற்போது இல்லாத நிலை காணப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, வைத்தியசாலைகளில் கட்டாய உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த மருத்துவர்களுக்குக் கூட அரசு நியமனம் கிடைக்க நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மதிப்பீடுகளின்படி, 2016 ஆம் ஆண்டு உயர்தரத் தேர்வு எழுதியவர்களுக்கு கூட 2051 ஆம் ஆண்டில் (சுமார் 54 வயதில்) தான் அரசு வேலை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பிற துறைகளில் அரச வேலைவாய்ப்பு மறுக்கப்படுகின்றது. உதாரணமாக, உயர்தர உயிரியல் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் வாய்ப்புக் கூட இல்லை.
இதனால், சுயமாக கிளினிக் தொடங்கி சேவை செய்ய வேண்டியதோ அல்லது வேலை இன்றி வீட்டில் இருக்க வேண்டியதோ என்ற கடினமான நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, மாணவர்கள் கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது:
- கொழும்பு பல்கலைக்கழக ஆயுர்வேத மருத்துவ பீடம்
- கொழும்பு பல்கலைக்கழக யுனானி மருத்துவ பீடம்
- கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத மருத்துவ பீடம்
- கிழக்கு பல்கலைக்கழகம் – திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீடம்
- யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடம்
சுகாதார அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மேற்குறிப்பிட்ட 5 சுதேசமருத்துவ பீடம் மற்றும் ஒன்பது மாகாண சுதேச மருத்துவ திணைக்களங்களிடம் தெளிவான திட்டமிடல் இல்லை என்றும் மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“எமது துறைக்கு வர வேண்டாம் என்று நாங்களே கூறுவது எங்களுக்கு எளிதானது அல்ல. ஆனால், எங்களது அனுபவங்களை முன்னிட்டு, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதிருக்கவே இந்த எச்சரிக்கையை வெளியிடுகிறோம்” என அவர்கள் வலியுறுத்தினர்.
இறுதியாக வழங்கப்பட்ட அரச நியமனங்கள் 2007, 2008, 2009, 2010, 2011 ஆம் ஆண்டுகளில் உயர்தரத் தேர்வு எழுதியவர்களுக்கே கிடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகள் இவ்வருடம் உயர்தரத் தேர்வு எழுதவுள்ள நிலையில், அதே 2007 ஆம் ஆண்டு உயர்தரத் தேர்வு எழுதியவர்கள் கடந்த நவம்பரில்தான் நியமனம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டிய உள்ளகப் பயிற்சிக்குக்கூட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது எனவும் உள்ளகப்பயிற்சி நியமனங்களைக் கூட நிரந்தர நியமனமாக சுகாதார அமைச்சு போலியாக வெளிக்காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2026 ஜனவரி 4 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க தகவல் திணைக்கள ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை பிரதமரும் கல்வி அமைச்சருமான கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய தெளிவான பதிலை வழங்கவில்லை என்றும், ஜனவரி 12 ஆம் தேதி அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் “வேலைவாய்ப்பு வழங்குவது எமது கடமையல்ல; கல்வி வழங்குவதுதான் எமது பொறுப்பு” என அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சரும் கலந்து கொண்டிருப்பினும் பதில் எதையும் வழங்கவில்லை. நாடு முழுவதும் சுமார் 1,680 ஆயுர்வேத மருத்துவர்களே வைத்தியசாலைகளில் பணியாற்ற ஆளணி உள்ள நிலையில், 2,720-க்கும் அதிகமான இருமடங்கு தகுதியான மருத்துவர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பது இந்த பிரச்சினையின் தீவிரத்தைக் காட்டுகிறது. எனவே, மாணவர்கள் தொழில்முறை கல்வித் துறைகளைத் தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இணைப்பாளர்
அரச வேலையை எதிர்பார்க்கும்
சித்த மருத்துவர் சங்கம்

