- செல்லையா பேரின்பராசா-
அம்பாரை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமாக மிளிரும் நற்பிட்டிமுனையில் இருந்து கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகள் என்று பல் துறைகளில் ஆளுமை மிக்க பெண்ணாக செயற்பட்டு வருபவர் கவிதாயினி ஜெனிதா மோகன்.
மோகன் , பிறேமானந்தினி ஆகியோரின் நான்கு பிள்ளைகளில் மூத்த பிள்ளை இவர். மத்தியமுகாம்-2 , நாவிதன்வெளியை பிறப்பிடமாகவும், நற்பிட்டிமுனை -2 , கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கிறார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை நற்பிட்டிமுனை கமு/கமு/ சிவசக்தி மகாவித்தியாலயத்தில் கற்றார். இப் பாடசாலையில் முதன் முதலாக கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுள் இவரும் ஒருவர்.
இப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற முதல் மாணவியும் இவரே ஆகும்.
இதனைத் தொடர்ந்து தனது உயர்கல்வியை கல்முனை கமு/ கமு/ உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கலைத்துறையில் கற்றார். அதில் மூன்று ஏ சித்தி பெற்றார். தமிழ் மொழியிலும் ஏ சித்தி கிடைத்தது. படிக்கும் காலத்திலேயே கட்டுரைப் போட்டிகளில் பங்கு பற்றினார். பரிசில்களும் சான்றிதழ்களும் பெற்றிருக்கிறார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் சிறப்புக் கற்கையை மேற்கொண்டு முதல் வகுப்பில் சித்தி பெற்றார். ஒரு வருடம் தற்காலிக உதவி விரிவுரையாராக பணி புரிந்தார். பல்கலைக்கழக காலத்தில் மேடைப்பேச்சுக்கள் பலவற்றில் பங்குபற்றினார். அத்தோடு கவிதை, கட்டுரைகளை பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளுக்கு எழுதினார். வாழ்த்துப்பாக்கள் பல எழுதியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு இருந்து 2018 ஆம் ஆண்டு வரை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமை புரிந்த இவர் அதனைத் தொடர்ந்து ஐந்து வருடங்கள் காரைதீவு பிரதேச செயலகத்திலும் கடமை புரிந்தார். 2023 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை கல்முனை பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வருகிறார்.
இவரது தந்தை ஒரு விவசாயி. இவர் குடும்பத்தில் மூத்த பிள்ளை. இவரது தந்தை பத்திரிகைகளை தினமும் வாசிக்கும் பழக்கமுடையவர்.இருப்பினும் இவர் எழுத்து துறையில் இவராகவே ஆர்வத்துடன் நுழைந்திருக்கிறார்.
தற்போது கல்முனை net ஊடக வலையமைப்பின் மங்கையர் பகுதிக்குரிய ஆசிரியராக செயற்பட்டு வருகின்றார். இவர் “சமூகவியல்” எனும் தலைப்பில் பதின்மூன்று ( 13 ) கட்டுரைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியீடு செய்திருக்கிறார். இதற்கு நூலக ஆவணமாக்கல் திணைக்களம் நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதற்கான தண்டனைகளும் அடங்கிய கையேடு இரண்டினை இதுவரை நூலாக வெளியிட்டுள்ளார். பட்டிமன்றங்கள், கவிரயங்குகளில் என்பவற்றில் கலந்து கொண்டு சிறப்பித்து தனது திறமையை வெளிக்காட்டி வருகின்றார்.
சமூகவியல் எனும் புத்தகத்திற்கு ஜனாதிபதி கையொப்பமிட்பட்ட சான்றிதழ் இவருக்குகிடைக்கப்பெற்றமை குறிப்பிட.தக்கது.
சிறுவர்கள் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், மது ஒழிப்பு,பெண்கள் உரிமைகள், தலைமைத்துவம், மனித உரிமைகள், நல்லிணக்கம், பால்நிலை சமத்துவம் போன்ற தலைப்புக்களில் வளவாளராகவும் பங்குபற்றிக்கொண்டிருக்கின்றார்.
கல்முனை பிராந்திய மனித உரிமை குழு அங்கத்தவராகவும், வேள்வி அமைப்பின் செயலாளராகவும், அம்பாரை வலுவிழப்புடன் கூடிய நபர்ளுக்கான வலையமைப்பின் பொருளாளராகவும், அம்பாரை பெண்கள் வலையமைப்பின் செயலாளராகவும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயலணியின் சமூக நல்லிணக்க குழுவின் செயலாளராகவும், சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் நல்லிணக்க குழுவின் உறுப்பினராகவும் செயற்படுவதுடன் பல்வேறு சமூகப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஜெனிதா பன்முக ஆளுமையுடையவர்.
இந்தியாவின் புண்ணை,லண்டன் காற்றுவெளி,அவுஸ்திரேலியாவின் உதயசூரியன் போன்றவற்றிலும் இவரது கவிதைகள் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.
அத்தோடு பிறை டிவி,கெப்பிட்டல் டிவி டாஸ்சபா டிவி போன்றவற்றில் கலந்துரையாடல்களில் பங்கு கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு தலைநகரை தளமாக கொண்டு இயங்கும் புதிய அலை கலை வட்டம் இருபது ( 20 ) சாதனைப் பெண்களை கௌரவப்படுத்திய நிகழ்வில் ஜெனிதா மோகன் அவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சக்தி டிவி சிரச டிவி வழங்கிய வனிதாபிமானி விருதின் முதலிடத்தை இரண்டு தடவைகள் மாகாண மட்டத்தில் பெற்றவர்.
Gafso நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சமாதான செயற்பாட்டாளர்களுக்கான விருதினை மாகாண மட்டத்தில் பெற்றுக்கொண்டார்.
அத்தோடு சுவாட் அமைப்பின் ஆளுநர் சபை உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் வளவாளர் குழாயில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இளங்கலைஞர் விருது வழங்கப்பட்டது.
ஸ்கைப் தமிழ் ஊடக வலையமைப்பின் துணிந்தெழு சஞ்சிகையின் ஐந்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டமைக்கு திருமதி. ஜெனிதா மோகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இவர் கல்முனை உள நல சங்கத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வருகிறார்.
அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் அம்பாரை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றார். 2025 ஆம் ஆண்டு இவர் இந் நிறுவனத்தினால் சேவை நலன் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அம்பாரை மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினராகவும் தற்சமயம் கடமை புரிந்து வருகின்றார்.
அத்துடன் Cafso நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட “இல்லத்து வழக்காடு” எனும் புத்தகத்திற்கான உள்ளீடு வழங்கிய இருவரில் ஜெனிதா மோகன் அவர்களும் ஒருவர் ஆவார்.
