செல்லையா பேரின்பராசா
உலக சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை அவர்களுக்கு கைதடி பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து பாராட்டு விழாவை முன்னெடுத்தனர்.
ஓய்வுபெற்ற அதிபர் சி. பவள குமாரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடி இணுங்கித்தோட்ட கந்தசுவாமி கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் இவ்விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் சார்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரன் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலகோபி உளமருத்துவ நிபுணர் டாக்டர் சிவயோகன் ஆகியோர் உரையாற்றினர்.
பாடசாலை கால நண்பர்கள் சார்பில் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் உரை ஆற்றினார். கைதடி பொது அமைப்புகள் சார்பில் ஓய்வுபெற்ற அதிபர் செல்லத்துரை உரையாற்றினார் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி ஓய்வு நிலை விரிவுரையாளர் லோகநாதன் அறிமுகவுரை ஆற்றினார்.
பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை ஏற்புரை வழங்கினார். தான் சென் ஜோன்ஸ் கல்லூரியில் கற்றகாலத்தில் தனக்கு மருத்துவ துறை மீது விருப்பு ஏற்பட்டமை பற்றியும் நண்பர்களின் ஊக்குவிப்பு பற்றியும் எடுத்துரைத்தார்
அத்துடன் யாழ் வைத்தியர்களின் மனிதநேய சேவை பற்றி விதந்துரைத்தார். இத்தகைய சேவை மனப்பாங்கை உலகில் வேறு இடங்களில் காண முடியாது என்றும் குறிப்பிட்டார்.










