கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1818 எனும் இலக்கத்தை உள்ளடக்கிய போதைப் பொருளுக்கு எதிராக “அகன்று செல்” தேசிய செயற்றிட்டம்
பாறுக் ஷிஹான்
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு இன்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரியதர்சினி றோகன் ஒருங்கிணைப்பில் பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன
இதன் போது “விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்”- அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி, பேரூந்து வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன.
பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாடு – போதைப் பொருளுக்கு எதிராக “அகன்று செல்” எனும் தொனிப் பொருளினையும், முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் 1818 இனையும் உள்ளடக்கிய வகையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் (Sticker) ஒட்டும் நிகழ்வில்
போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான இளம் சமூகத்தை உருவாக்குவதே நமது இலக்கு. இந்த வாரம் முழுவதும் தொடரும் இந்தப் பிரச்சாரத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்பதன் மூலம், நம் பிரதேசத்தை போதைப்பொருள் அற்ற சூழலாக மாற்ற முடியும்.போதை ஒழிப்பு – நமது பொறுப்பு!இளைஞர்களைப் பாதுகாப்போம்! சமூகத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மார்ச் மாதம் 01 முதல் ‘முழு நாடும் ஒன்றாக, தேசிய செயல்’ திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி உட்பட பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோரும் கலந்து கொண்டனர்.














