புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் – காரைதீவு அமர்வில் கடும் எதிர்ப்பு!
(வி.ரி.சகாதேவராஜா)
அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயக அடிப்படைகளையே பாதிக்கும் அபாயம் கொண்டது என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் கடுமையாக எச்சரித்தார்.
காரைதீவு பிரதேச சபையின் எட்டாவது அமர்வு இன்று (16) திங்கட்கிழமை கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் எந்த சட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.
புதிய சட்டம் நாட்டில் ஜனநாயக உரிமைகள் குறையும் சூழலை உருவாக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சட்டம் கொண்டு வரப்படுமாயின் அது அரசியல் கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்கும், குடிமக்களின் உரிமைகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு சமூக செயற்பாட்டாளர்கள் மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அவர் குறிப்பிட்டார்.
சட்டம் தொடர்பாக மக்கள் கருத்து கேட்காமல் அவசரமாக முடிவெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், விரிவான பொதுக் கலந்துரையாடல் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
ஏலவே கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு எத்தகைய பாரிய சவால்களை ஏற்படுத்தியது என்பதை நாம் மறக்க முடியாது.
அப்படி இருக்கையில் புதிய சட்டம் குறித்த ஆழ்ந்த கவலை வெளியிட்டதுடன், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் ஒன்றுபட்ட நிலைப்பாடு அவசியம் எனவும் தெரிவித்தார்.
மேலும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட விருப்பது சமுதாயத்தின் சகல மட்டங்களிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.



