சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ பட்டதாரிகளுக்கு அரச நியமனம் இல்லை – UGC கைநூலில் தெளிவான அறிவிப்பு சேர்க்க கோரிக்கை

சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ பட்டப் படிப்புகளை முடிக்கும் மருத்துவர்களுக்கு அரச துறையில் உடனடி நியமனம் கிடைக்காது அல்லது அரச வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை என்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் (UGC) கைநூலில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என உயர் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அரச வேலை எதிர்பார்ப்பில் உள்ள சித்த மருத்துவர்களின் சங்கம் 23.11.2025 அன்று அனுப்பிய கோரிக்கை கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அபிவிருத்தி இயக்குநர் K.W.A.M. கோகில அவர்களால் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி பட்டப் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்கள் எதிர்காலத்தில் அரச வேலை உறுதி என்ற தவறான எண்ணத்தில் சிக்காமல் இருக்க, UGC Handbook-இல் முன்னறிவிப்பு மற்றும் தெளிவான விளக்கம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் சுகாதார அமைச்சும் வெகுஜன ஊடக அமைச்சும் சார்ந்த அதிகார வரம்பிற்குள் வருவதால், தேவையான மேலதிக நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் தலைவருக்கும் குறித்த தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம், க.பொ.த. உயர்தர முடிவுகளுக்குப் பின்னர் சுதேச மருத்துவப் பட்டப் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்கள் உண்மையான நிலைமையை முன்கூட்டியே அறிந்து, தங்கள் எதிர்காலம் குறித்து தெளிவான முடிவு எடுக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.