18-12-2025
ஊடக அறிக்கை
கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையை சீரமைக்கக் கோரும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்


கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (TAEU) தீவிர கவலையுடன் அறிவிப்பதாவது, தற்போதைய கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையானது சில முறைகேடுகள் காரணமாக சட்ட வலுவற்ற பேரவையாக இயங்குகின்றது. இம்முறைகேடுகள் பற்றி பல்கலைக்கழகத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் குழுவிற்கும் அறிவித்திருந்தும் அவை இன்னமும் திருத்தப்படவில்லை.


கிழக்குப் பல்கலைக்கழகப் பீடாதிபதி ஒருவருக்கான பணியாளர் இடமானது (Cadre) முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினாலும் (Department of Management Service) பிரதமர் அலுவலகத்தினாலும் அங்கீகரிக்கப்படாதபோது அப்பீடாதிபதி பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அங்கீகரிக்கப்படாத நியமனமானது பல்கலைக் கழகத்திற்கு வெளியில் இருந்து நியமிக்கப்படும் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதால் தற்போதைய பேரவையானது சட்டத்திற்குப் புறம்பான எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்றது. இதன்காரணமாக இப்பேரவையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானமானது சட்ட ரீதியாக சவால்களுக்கு உட்படுத்தக் கூடியதாக அமைகின்றது.


மேலும் போலியான பேராசிரியர் மற்றும் கலாநிதிப் பட்டத்தினைப் பயன்படுத்தும் ஒரு வெளிப்புற பேரவை உறுப்பினர் ஒருவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகைய ஒருவரை மதிப்பார்ந்த பேரவையின் உறுப்பினராக நியமித்திருப்பது நாட்டின் உயர்கல்வி துறையின் நம்பகத்தன்மையையும் ஒழுக்கநெறியையும் கடுமையாக கேள்விக்குள்ளாக்குகின்றது. குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உச்ச நிர்வாக அமைப்பான பேரவை எடுக்கும் தீர்மானங்களின் மதிப்பையும் இது கேள்விக்குள்ளாக்குகின்றது. இது பற்றி பலமுறை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இதுவரை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவோ அல்லது கிழக்குப் பல்கலைக் கழகமோ எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மேற்படி இரு விடயங்களினதும் பாரதூரத் தன்மையை அறிந்திருந்தும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் தகுந்த நேரத்தில் இவற்றை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டன. தற்போதைய இலங்கை அரசு ஊழலற்ற தேசத்தை உருவாக்குவதற்கான செயலில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில், பிழை என அறிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது இவ்விரு நிர்வாகங்களினதும் அசமந்தப் போக்கினைக் காட்டுகிறது.
நிறைவேற்றப்படும் வரை பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு கோருகிறது:
பல்கலைக்கழகச் சட்டம் எண் 16 of 1978-இன் விதிகளின்படி பேரவையை முறையாக சீரமைக்கப்படவேண்டும், மற்றும்போலிப் பட்டங்களைப் பயன்படுத்தும் பேரவை உறுப்பினர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் டிசம்பர் 18 (2025) ஆந்திகதி அடையாளப் பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொள்கிறது.
செயலாளர்
கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (TAEU)