அம்பாறை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு-பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ள நீதிக்கான மய்யம்

பாறுக் ஷிஹான்

அம்பாறையை இருளில் மூழ்கடித்த தொடர் மின்வெட்டு: மின்சார சபையின் அசமந்தப் போக்கை கண்டிக்கும் ‘நீதிக்கான மய்யம் ; பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உடனடியாகத் தலையிடக் கோரிக்கை

(கல்முனை, டிசம்பர் 02) – கடந்த நவம்பர் 27, 2025 முதல் அம்பாறை மாவட்டத்தை முற்றாக முடக்கியுள்ள தொடர் மின்வெட்டு மற்றும் அது குறித்து பொதுமக்களுக்கு உரிய தகவல்களை வழங்க மின்சார சபை தவறியுள்ளமை குறித்து ‘நீதிக்கான மய்யம் – இலங்கை’ (Centre for Justice – Sri Lanka) தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள விசேட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய மின்த் தடையினால், வீடுகள், வர்த்தக நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் விவசாயப் பண்ணைகள் என சுமார் 170,000க்கும் அதிகமான மின் நுகர்வோர் கணக்குகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும், இடையிடையே மிகக் குறுகிய நேரத்திற்கு மட்டுமே, எவ்வித முன்னறிவிப்புமின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளைப் பாதுகாத்தல், அத்தியாவசிய இயந்திரங்களை இயக்குதல் உள்ளிட்ட அன்றாட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

வெள்ள அனர்த்தத்தினால் உட்கட்டமைப்புகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக்கொண்டாலும், சீரமைப்புப் பணிகளின் நிலைமை அல்லது மின்சாரம் எப்போது வழமைக்குத் திரும்பும் என்பது குறித்து மின்சார சபை இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என நீதிக்கான மய்யம் குற்றம் சாட்டியுள்ளது.

பிராந்திய மின்சார சபை அலுவலகங்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படுவதில்லை எனவும், நுகர்வோருக்கு குறுஞ்செய்தி (SMS), சமூக ஊடகங்கள் அல்லது இணையதளம் ஊடாக பகுதி வாரியான தகவல்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவல் இருட்டடிப்பு காரணமாக மக்களிடையே தேவையற்ற பதற்றமும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.


மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் அனர்த்த காலங்களில் பொதுமக்களுக்கு முறையான தகவல்களை வழங்குதல் ஆகியன இலங்கை மின்சார சட்டம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) நுகர்வோர் தரநிலைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மின்சார சபையின் செயற்பாடுகள் இந்த சட்டக் கடமைகளை மீறுவதாக அமைந்துள்ளதென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


இந்நிலையில், இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிடுமாறு கோரி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) நீதிக்கான மய்யம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது. அம்பாறை மாவட்ட மின் விநியோகத்தை சீரமைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும், மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகள் மற்றும் நேர அட்டவணை குறித்த தெளிவான நாளாந்த விபரங்களை (Daily Updates) வெளியிடுமாறு மின்சார சபையை நிர்ப்பந்திக்குமாறும் அந்தக் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், அனர்த்தத்தின் போதான மின்சாரத் துறையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தீர்க்கமான நடவடிக்கைகள் அவசியம் என நீதிக்கான மய்யம் மேலும் வலியுறுத்தியுள்ளது.


இந்நிலையில் மின்சார சபை பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் வினைத்திறனற்றதாக காணப்படுவது கவலையளிக்கிறது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.