பீனிக்ஸ் பறவைகளாய் மீண்டும் எழுந்திருப்போம் வாரீர்!
மலையகபோராட்டத்தில் தேசிய மக்கள் சக்தி உயர்பீட உறுப்பினர் கலாநிதி சிவா அறைகூவல்.
( வி. ரி.சகாதேவராஜா)
உங்களுக்கு நாங்கள் தொடர்ந்து அடிமைகளாக இருப்போம் என நினைத்தீர்களா..?
அந்த சங்கிலிகள் உடைபட்டுள்ளன அவற்றை உடைத்தே தீருவோம்.
மலையக மக்களே இந்த எதிரிகளை தெளிவாக அடையாளம் காண வேண்டியது உங்களுடைய பொறுப்பும் கடமையுமாகும். அப்படி இல்லாவிட்டால் அடுத்த தலைமுறையையும் நவீன அடிமைகளாகவே வாழ நேரிடும்.எனவே
பீனிக்ஸ் பறவைகளாய் மீண்டும் எழுவோம் வாருங்கள்
இவ்வாறு மலையகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் நேற்று லூல்கந்துற தோட்டத்தில் கலந்துகொண்டு முழங்கிய தேசிய மக்கள் சக்தி உயர்பீட உறுப்பினரும் பெருந்தோட்ட பிரதியமைச்சரின் செயலாளருமான கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் அறைகூவல் விடுத்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்…
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமானது அவர்களின் அடிப்படை உரிமை ஆகும்.
வரலாற்று ரீதியாக பார்க்கும் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே வரவு செலவு திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து நாளாந்தம் தோட்டத் தொழிலாளருக்கு 200 ரூபாவும் கம்பெனிகளிடமிருந்து 200 ரூபாய் மொத்தமாக 400 ரூபா, அதாவது 1750 ரூபா சம்பள உயர்வை 2026 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து வழங்க தீர்மானித்துள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை பிற்போக்குத்தனமான இனவாத, மதவாத எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எதிர்த்து வருகின்றனர். இதற்கு மக்கள் தகுந்த பதில் அளித்து வருகின்றனர். எவ்வாறு எனினும் மலையக மக்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருக்க முடியாது. அவர்கள் இந்த நாட்டின் கௌரவமான, சமத்துவம் உள்ள பிரஜைகள்கள் என்பதை புதிய அரசியல் நிலை நிறுத்தி வருகின்றது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபா சம்பளம் அதிகரிப்பு குறித்து இன்று பலர் கொதித்து எழுகின்றனர். இலங்கை தீவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய், இந்த நாட்டிற்கு வரி செலுத்தி வருகின்ற, இந்த நாட்டின் பிரஜைகள் ஆகிய, இந்த நாட்டின் வாக்காளர்களாகிய, இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் ஆகிய மலையக பெருந்தோட்ட தொழிலாளர், அவர்களின் உழைப்பு, அவர்களின் வியர்வை, அவர்களின் இழப்பு இவை இந்த நாட்டை இன்று சமூக அபிவிருத்தியில் ஒரு முன்னிலைப்படுத்திய நாடாக உருவாக்கி இருக்கின்றது. அவர்கள் கொண்டு வந்த வெளிநாட்டு அந்நிய செலாவாணி இந்த நாட்டின் தனவந்தர்களின் கார்களாகவும், மாளிகைகளாகவும், லாபங்களாகவும் பரிணமித்துள்ளன. இந்து சுரண்டல்வாதிகளின் சொகுசான வாழ்க்கை, படாடோபம், அரசியல் பொருளாதாரம், மேம்பாடு என்பவற்றின் அடித்தளத்தில் புதைந்து போய் உள்ள எலும்புக்கூடுகளாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் காணப்படுகின்றார்கள். இவர்களுக்கு 200 ரூபாய் அரசாங்க நிதியில் வழங்குவதற்கு மிலேச்சத்தனமான எதிர்ப்பை பல பச்சோந்திகள் தெரிவித்து வருகின்றனர். இதிலே படுமோசமான இனவாதி, மதவாதியாக கல்முனையிலிருந்து காரியப்பரும் பேரினவாதத்தை கக்குகின்ற சஜித் நாமல் போன்ற எதிர்க்கட்சியினரும், லஞ்ச ஊழலுக்கு பேர் போன கட்சியில் இருந்து முறைப்பாடு செய்ய ஒரு பெண்ணும் பாராளுமன்றத்தில் இருந்து புறப்பட்டு உள்ளனர்.
இது மோசமான இனவாதம் மதவாதத்தை உருவாக்குகின்ற ஒரு நடவடிக்கையாகவே பார்க்கின்றோம். இந்த மலையக மக்களினால் தான் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. என்பதை மறந்து போன கல்முனை வாசி நீண்ட காலமாக வழக்கரீதியாக எம் மக்களை அடிமையாக வைத்திருக்கலாம் என்று பேரினவாதிகளின் கனவு.
இனி இது சாத்தியமில்லை. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் மலையக மக்கள் எழுந்து நிற்பதை எந்த சக்தியினாலும் வீழ்த்த முடியாது. உங்களுக்கு நாங்கள் தொடர்ந்து அடிமைகளாக இருப்போம் என நினைத்தீர்களா..?
அந்த சங்கிலிகள் உடைபட்டுள்ளன அவற்றை உடைத்தே தீருவோம்.
மலையக மக்களே இந்த எதிரிகளை தெளிவாக அடையாளம் காண வேண்டியது உங்களுடைய பொறுப்பும் கடமையுமாகும். அப்படி இல்லாவிட்டால் அடுத்த தலைமுறையையும் நவீன அடிமைகளாகவே வாழ நேரிடும்.
