கைதடி சித்த போதனா வைத்தியசாலைக்கு தேசிய தரம் வழங்க நிதி ஒதுக்கீடு இல்லை – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் அதிருப்தி

2026 ஆம் ஆண்டுக்கான அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் கைதடி சித்த போதனா வைத்தியசாலையை தேசிய அளவிலான மருத்துவமனையாக மாற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு இடம்பெறாததைத் தொடர்ந்து, சித்த மருத்துவ வட்டாரங்களில் கடும் விரக்தி நிலவுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சித்த மருத்துவ சேவையின் மையமாக விளங்கும் கைதடி சித்த போதனா வைத்தியசாலை, கல்வி, ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகிய துறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி சுகாதார அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் இதனை தேசிய சித்த வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும், புதிய பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடு காணப்படாதது சித்த மருத்துவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொரளை ஆயுர்வேத வைத்தியசாலை தற்போது ஐந்து மாடிக் கட்டடத்துடன் நவீன வசதிகளுடன் இயங்குகிறது. ஆனால், வடகிழக்கு மக்களின் நம்பிக்கையான கைதடி சித்த வைத்தியசாலை இன்னும் குறைந்த வசதிகளுடன் செயல்படுகிறது என்பது கவலைக்குரியது என அவர்கள் கூறுகின்றனர்.

சித்த மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “வடமாகாண மக்களின் நலனுக்காக 6 மாடிகள் கொண்ட தேசிய தரம் வாய்ந்த சித்த வைத்தியசாலை கைதடியில் அமைக்கப்படுவது காலத்திற்கேற்ற அவசியம். இது கல்வி, ஆய்வு மற்றும் நோயாளி சேவையில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்,”
என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி போன்ற சுதேச மருத்துவ முறைகளுக்கு அரசின் அக்கறை குறைவது கவலைக்குரியது என்றும், இத்துறைகள் நாட்டின் பாரம்பரிய அடையாளமாக இருப்பதால் அவற்றை மேம்படுத்த உறுதியான கொள்கை தேவை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் சங்கம், கைதடி சித்த வைத்தியசாலையை தேசிய அளவிலான சித்த வைத்தியசாலையாக மாற்றிடவும், அதற்கான நிதி ஒதுக்கீட்டை விரைவில் உறுதி செய்யவும் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த மகஜரில், “தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் கைதடி சித்த வைத்தியசாலை தற்போது போதுமான வசதிகளின்றி இயங்குகிறது. வடமாகாண மக்களுக்காக நவீன வசதிகள் கொண்ட தேசிய சித்த வைத்தியசாலை விரைவில் நிறுவப்பட வேண்டும்,”
என கோரப்பட்டுள்ளது. மேலும், “தேவையெனில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் நேரில் சந்தித்து எமது கோரிக்கைகளை விளக்க தயார்” என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.