நற்பிட்டிமுனை பிரதேச   பொது மக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான்

கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு கலந்துரையாடல் தொடர்பில் நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பதில்  பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார்  றபீக் தலைமையில் இன்று   நற்பிட்டிமுனை பெரிய ஜும்மா பள்ளிவாசல்  மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் பங்குபற்றலுடன் நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு  தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

நிகழ்வில் முதலில்  மத ஆராதனை இடம்பெற்றதுடன் வரவேற்புரை மற்றும் விடயம் தொடர்பான விளக்கவுரைகள் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் பொது மக்கள் பாதுகாப்புக் குழுவின் பொறுப்பதிகாரியுமான   ஏ.எல்.ஏ வாஹிட் மெற்கொண்டார்.

அதனை தொடர்ந்து கல்முனை பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு  தொடர்பாக கருத்து மற்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டன.

இதன்போது தற்போது  கிராமங்களில் இடம்பெறும்   திருட்டுச் சம்பவங்கள்  போதைப்பொருள் பாவனை விற்பனை, மற்றும் சமூக சீர்கேடு தொடர்பான விடயங்கள், இதனை தடுப்பதற்கான வழிமுறைகள்  தொடர்பான விழிப்புணர்வை  ஏற்படுத்துதல்,பொது மக்கள் பாதுகாப்பு குழுவில் புதிதாக  அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளல்  மாணவ மாணவிகள் பிரச்சினைகள்  வீதி போக்குவரத்து பிரச்சினை , பிரதேச சமூக பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், சிவில் குற்றங்கள், முரண்பாடுகள், குடும்ப பிரச்சனைகள் போன்ற பல்வேறுபட்ட தலைப்புக்களை அடிப்படையாக கொண்டு கலந்துரையாடப்பட்டன.

சமூக பாதுகாப்பு நிறுவனமான குடும்பம், பாடசாலை, சமய நிறுவனம், சமூக அமைப்பு நிறுவனத்தின் வகிபாகம், ஏதிர்காலத்தில் சமூகத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு இடையிலான சமூக இடைவினையை அதிகரித்தல், பாடசாலை மாணவ, மாணவிகள் ஒழுக்கம், வீதி போக்குவரத்து விதிமுறைகள் தெளிவுபடுத்தல், சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துதல், சமூக சேவை திட்டங்கள், பொது சிரமதான பணிகள் நடைமுறைப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

நிகழ்வின் இறுதியில்  ஆலோசனைகள் கருத்துக்களை பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் கேட்டறிந்து கொண்டார்.



நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடலில் நற்பிட்டிமுனை பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர் மௌலவி ஜே.எம் ரிஷான் (ஹாமி) ,மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  பி.ரி  நஸீர் ,பிரதேச பிரமுகர்கள் விளையாட்டுக் கழக நிர்வாகிகள் உட்பட பல தரப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.