மகாளயபட்சம்  

புரட்டாசிப் பவுர்ணமியை அடுத்த பிரதமையில் தொடங்கி 15 நாட்கள் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகாளயபட்சம் எனவும் கூறுவர். மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும்.

மாதா மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் மகாளய அமாவாசை என்பது மிகவும் விசேடமானது. மகாளய அமாவாசைக்கு முன்னர் மகாளயபட்சம் என்ற ஒன்று ஆரம்பமாகும். எப்படி கிருஷ்ண பட்சம், சுக்கில பட்சம் என்ற இரண்டு உள்ளது. சுக்கில பட்சம் என்றால் வளர் பிறை, கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை. அதுபோல் மகாளய பட்சம். இது எப்போது ஆரம்பம் ஆகுமென்றால், புரட்டாசி மாத ஆரம்பத்தில் வரும் பெளர்ணமி முடிந்த மறுநாள் அல்லது ஆவணி மாத இறுதியில் வரும் பெளர்ணமி முடிந்த மறுநாள்  மகாளய பட்சம் ஆரம்பமாகும். இதில் தொடங்கி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிறது அல்லவா, அதுவரை – அதாவது பெளர்ணமியில் இருந்த அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மகளாய பட்சம் ஆகும். 


புரட்டாசி அமாவாசைதான் மகாளய அமாவாசையாகும். இந்த காலத்தில் சில வருணத்தார் திருமணம் போன்ற எந்த சுப காரியத்தையும் செய்ய மாட்டார். ஏனென்றால் இந்த காலப் பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது. சிரார்தம் என்று கூறுவார்கள் அல்லவா, அதுபோல் திதி கொடுப்பது, தான, தர்மங்கள் செய்வது, பங்காளிகளுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பது, அதாவது சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளில் உள்ள வில்லங்கங்களைத் தீர்த்துக் கொள்கிற காலம்தான் இந்த மகாளய பட்சம் என்பது. இதன் உச்சதான் மகாளய அமாவாசை ஆகும்.


மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாலோ தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசை தினத்தன்று திதி கொடுத்தால் அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்கில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது. 


இதுமட்டுமல்லாது, தீராத நோய்களுக்கு மருத்துவம் செய்துக் கொள்ள தொடங்குவதற்கும் மகாளய அமாவாசை சரியான நாளாகும்.  

மகான்கள் பாதி மாதம் பூமியில் வந்து வாழுகின்ற காலம் என்பதை மகாளயபட்சம் என்று கூறுகிறார். இந்நாள்களில் இறந்து போன முன்னோர்கள் ஆவி ரூபத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய சக்திகளைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் வாழிடங்களுக்குச் சென்று தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

அதனால் இந்த நாள்களில் நீர்த்தார் நீர்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதினைந்து நாள்களில் மாளய அமாவாசை முக்கிய நாளாகும். பிறகு மகாபரணி, மகாவியதீபாதம், மத்யாஷ்டமி, சந்யஸ்த மாளயம், கஜச்சாயா புண்யகாலம், சஸ்தர ஹத மாலயம் போன்ற நாள்களிலும் நீத்தாருக்கு நீர்கடன் அளிக்கின்றார்கள்.

“மகாளயம்’ என்றால் “பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் காலமே மகாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள்.

பொதுவாக ஒருவர் ஒரு வருடத்தில் தன்முன்னோர் களுக்காக 95 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. மிக மிக சொற்பமானவர்களே இதை செய்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் மகாளய பட்ச நாட்களில் தர்ப்பணம், சிரார்த்தம், தான தர்மம் செய்தால் அந்த ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலனை பெற முடியும்.

அதிலும் குறிப்பாக மகாளயபட்ச நாளில் வரும் மத்யாஷ்டமி தினத்தன்று செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம், தான தர்மங்கள் மற்ற புண்ணிய நாட்களில் கிடைக்கும் பலனை விட கூடுதலாக 20 மடங்கு பலன் தர நல்லது.

அது போல மகாளய பட்சத்தில் வரும் துவாதசி தினத்தன்று அது செய்யும் தர்ப்பணத்துக்கு 100 மடங்கு பலன் கிடைக்கும்.


மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களைத்தர வல்லது.

எனவே மகாளய பட்சத்தின் 14 நாட்களும் நீங்கள் பித்ருக்களை வழிபடுவது உங்கள் குடும்பத்தை மேன்மைப் படுத்துவதாக இருக்கும்.

புராணங்களில் மகாளயபட்சம்

கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பெற்றுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

நாம் கலியுகத்தில் வாழ்வதால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளயக் கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.

இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இந்தப் பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், இராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களுக்கு ஒரு நாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்குப் புல், பழம் கொடுக்கலாம்.

ஸ்ரீமந்நாராயணனே இராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டுக் கூடத் திதி பூஜையைச் செய்யலாம். பின்னர் பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

பித்ருக்களுக்குத் ( மூதாதையர்களுக்கு ) தர்ப்பணம் கொடுக்கும் போது வேத விற்பன்னர்கள் சொல்லும் மந்திரங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம்.

எனவே தர்ப்பணத்தின் போது கீழ்கண்டவாறு மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள் அது போதும்.

” என் தாயார் ; என் தந்தை ; என் சகோதரர் ; என் உறவினர்கள் என்று எந்த வகையான உறவுகளுக்கும் உட்படாத என் கோத்திர பிரிவுக்குள்ளும் வராத எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இப்பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ இயற்கையாலோ வியாதியாலோ விபத்தினாலோ இந்த உலகை விட்டு பிரிந்திருக்கக்கூடிய அனைத்து ஆத்மாக்களும் நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன் மேலுலகில் எந்த துன்பங்களும் அனுபவிக்காமல் மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் அனைத்து நன்மைகளும் பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும் ” என்று சொல்லி நம் மூதாதையர்களுக்கு தர்ப்பணத்தை அர்ப்பணிக்கவும்.