நன்றி -ARVL
கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இரண்டு வெவ்வேறு விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி முகத்திடலில் ‘அரகலய’ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் திரு.ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய இராச்சிய விஜயத்தின் போது அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் திரு. ஏக்கநாயக்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, திரு. விக்கிரமசிங்கவின் ஊடகப் பிரிவு, அவரது வழக்கறிஞர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் மற்றுமொரு தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் இந்த விஜயம் தொடர்பான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளன.
திரு.விக்கிரமசிங்கவின் வழக்கறிஞர்களிடமிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அந்த அழைப்பிதழின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்த ஆவணங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
