நம் சமூகத்துக்குரிய தனித்துவங்களை ஆவணமாக்குவதும், இலக்கிய சாட்சியங்கள் ஆக்குவதும் முக்கியமானது. திணைக்களத்தையும், தன் தொழிலையும் உளப்பூர்வமாகக் காதலிக்கும் திரு. நவநீதனாலேயே இந்தப் பெருமுயற்சி சாத்தியமாகியிருக்கிறது என பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ இரண்டாம் தொகுதி நூல் அறிமுக நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ இரண்டாம் தொகுதி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில், கடந்த 17.05.2025 அன்று வெளியாகியுள்ளது.

முதற் பாகத்தைப் போலவே , கிழக்கு மாகாணத்தில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த / வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னும் நூறு படைப்பாளிகளுடனும் அவர்களுடைய சிறுகதைகளுடனும் இந்தப் பெருந்தொகுப்பு நூலும் வெளியாகியுள்ளது.

‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ என்னும் தலைப்பைக் கேட்டதுமே கிழக்கின் வட்டார மொழிகளில், கிழக்கின் வாழ்வியல் கோலங்களை மாத்திரம் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு என சிலர் எண்ணியிருக்கக் கூடும். ஆனால் இந்தத் தொகுப்புகள் அப்படியொரு வரையறைக்குள் உருவாக்கப் பட்டவை அல்ல. கிழக்கு மாகாணம் என்பது இந்தத் தொகுப்புக்காக நிர்ணயம் செய்யப்பட்ட இட எல்லை மாத்திரமே.

கிழக்கின் மண்ணில் பிறந்து இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர்கள், இந்த மண்வாசத்தை சுவாசித்து இங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், பல்வேறு காரணங்களால் இந்த மண்ணைத் துறந்து வெவ்வேறு திக்குகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றவர்கள், காரண காரியமாக இந்தக் கிழக்குமண்ணில் காலடியெடுத்து வைத்துக் காலப்போக்கில் ‘பாயோடு ஒட்டி வேரோடியவர்கள்’…’ எனப் பலருக்கும் இந்தத் தொகுப்பு விரிந்து, வளைந்து இடமளித்திருக்கிறது.

அதே போல இதிலுள்ள கதைகளும் பன்முகத்தன்மை கொண்டவை. கிழக்கு சமூக வாழ்வியலின் பலவித கோலங்களும் கதைகளில் வந்து சேர வேண்டும் என்பது தொகுப்பாளர்களின் ஆர்வமாக இருந்தாலும் கூட, கைக்கெட்டிய கதைகள் அதை சாத்தியமாக்கவில்லை போலும். எல்லாக் கதைகளும் கிழக்குக்கேயுரிய வாழ்வியல் கோலங்களைக் கொண்டிருக்கின்றன எனக் கூறுவதற்கில்லை.

ஜனரஞ்சகம், மிகையுணர்ச்சி, யதார்த்த வாதம், கற்பனாவாதம், தனிமனித ஆசாபாசம், இலட்சியவாதம், மனிதநேயம், நீதிபோதனை,தத்துவ விசாரம்,சமூக சீர்திருத்தவாதம் என்பவற்றிலிருந்து கிளைத்த ,பல்வேறு வகைமைகளுக்குள் அடக்கக் கூடிய 100 கதைகள் இந்தத் தொகுப்பிலுள்ளன.

இவ்வாறு ஒரு மாகாண ரீதியான எல்லைப்பரப்பை நிர்ணயம் செய்து கொண்டு, கதைகளைத் தொகுக்க வேண்டிய தேவையென்ன என ஒரு கேள்வி எழலாம்.

மாகாண எல்லைகளைப் பொருட்படுத்தாமல் , எல்லை கடந்து ‘நாமெல்லோரும் இலங்கையர்கள் ‘ என ‘ஒற்றுமைப் பரணி’ பாடி ஒரே கடலில் கரைவது, அல்லது ஒரே ஜோதியில் கலப்பது இலகுவான விஷயம்தான்.

ஆனால் நம் சமூகத்துக்குரிய தனித்துவங்களை ஆவணமாக்குவதும், இலக்கிய சாட்சியங்கள் ஆக்குவதும் முக்கியமானது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகமுண்டு. எல்லா முகங்களும் ஒன்றல்ல. இந்த வகையில் நம் தனித்துவமான அடையாளங்களை நாம் தக்க வைக்க வேண்டியவர்கள் ஆகின்றோம். அப்படியான ஓர் நிலையிலேயே இத்தகைய இட எல்லைகளை, இன எல்லைகளை வகுத்துக் கொண்டு இத்தகைய தொகுப்புகள் வருவது தேவையாக உள்ளது.

தத்தம் தனித்தன்மைகளைக் காப்பாற்றிக்கொள்ள நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களுக்குள் வாழ்கிறோம். தனித்துவமான முகத்தை, தனித்துவமான குரலை உருவாக்கிக் கொள்ள இத்தகைய தொகுப்புகள் எதிர்காலத்தில் சாட்சியங்களாக அமையக் கூடும்.

என் தனிப்பட்ட ரசனையில் இத் தொகுப்பில் எனக்குப் பிடித்த 24 கதைகள் உள்ளன. அதே வேளை , பரவாயில்லை என்று கருதும் கதைகளும், மோசமான கதைகளும் இத் தொகுப்பில் இருக்கின்றன. தாராள மனதுடன், இறுக்கமான அளவுகோல்கள் இன்றி ஒரு தொகுப்புக்காகக் கதைகளைத் தேர்வு செய்யும் போது இப்படித்தான் நிகழும்.

கிழக்கு மாகாணத்தின் அரசாங்கத் திணைக்களமொன்றின் வெளியீடு என்ற வகையில் அவர்கள் தேர்வு முறையில் ஒரு நெகிழ்வுப் போக்கைக் காட்டியிருக்கிறார்கள் என இதனை எடுத்துக் கொள்ளலாம். தவிரவும் கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்குரிய பங்குகளையும் கவனத்துடன் பகிர வேண்டிய தேவையும் அவர்களுக்கு உண்டு.

658 பக்கங்களைக் கொண்ட இந்த இரண்டாவது பெருந்தொகுப்பு நூலிலும், நான் எதிர்பார்த்த சில எழுத்தாளர்கள் தவறிப் போயிருக்கிறார்கள். முக்கியமாக டணீஸ்கரன், சப்னாஸ் காசிம், உமையாழ் பெரிந்தேவி போன்றோர். தொடர்பாடலில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கலாம். ஏனைய சில எழுத்தாளர்கள் விடுபட்டதில் சர்வதேச சக்திகளின் சதித் திட்டங்கள் எவையுமிருக்க வாய்ப்பில்லை.

திணைக்களத்தையும், தன் தொழிலையும் உளப்பூர்வமாகக் காதலிக்கும் திரு. நவநீதனாலேயே இந்தப் பெருமுயற்சி சாத்தியமாகியிருக்கிறது. இப் பெருந்தொகுப்புகள் அவருடைய பணிக்காலத்தின் சாதனைகளில் மகத்தானதாக வரலாற்றில் குறிப்பிடப்படும் என்றார்.