தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட முடியாது…
(பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்)

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் நாங்கள் அவசரத்தில் முடிவெடுத்து விட முடியாது. எமது இனத்தின், மக்களின் நிலைமைகளை மிகவும் ஆளமாக ஆய்வு செய்தே இந்த விடயத்தில் நாங்கள் முடிவெடுப்போம். இது தொடர்பில் நாங்கள் அவசரப்பட வேண்டியதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் காயத்திரி கிராம சமூக சமய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் சக்தி சனசமூகத்தினால் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச சபைகளின் செயற்பாடுகள் என்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிகன்றன. இவற்றை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். உள்ளுராட்சி சபைகளின் மூலம் உள்ளுர் மக்களின் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் அதனைப் பிரதேச சபைகள் செய்ய வேண்டும். பல திணைக்களங்கள் இருந்தாலும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கக் கூடிய திணைக்களமாக இந்த உள்ளுராட்சி மன்றங்களே இருந்து கொண்டிருக்கின்றன.

நாங்கள் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் அல்ல. நீண்ட காலமாக எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள். நாங்கள் ஏனைய கட்சிகளைப் போலல்லாது எமது மக்களின் இருப்புக்காகப் போராடுபவர்கள். எமது மக்களின் இருப்பு பலப்படுத்தப்படும் போது தான் நாம் பலமடைய முடியும்.

எமது தமிழ் மக்கள் மீது இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர வேறு எவரும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்களா என்பது கேள்விக்குறியான விடயமே. அந்த அடிப்படையில் எமது சமூகத்தைக் கட்டிக்காக்கக்கூடிய செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். எங்களுடைய தேசியத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை நாங்கள் நிரூபித்து அதனூடாக சிறந்த பணிகளை நாங்கள் முன்னெடுத்து எமது சமூகத்தை வளப்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. இந்த பிரிவுகளை நீக்கி எதிர்காலத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய பல பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். எமது மாவட்டத்தைப் பொருத்தவரையில் இந்த பிரிவு தமிழர்களுக்கு பாரிய ஆபத்தையே தோற்றுவிக்கும். நாங்கள் இங்கு சுமார் 17 வீதமாகவே இருக்கின்றோம். ஏனைய சமூகங்களால் அடக்கி ஆளப்படுகின்ற இனமாக இந்த மாவட்டத்திலே இருப்பதன் காரணமாக எங்களுடைய ஒற்றுமை என்பது இங்கு மிகவும் அவசியமாக இருக்கின்றது.

நாங்கள் மாகாணசபை காலத்தில் இருந்து இந்த மாவட்டம் எமது தமிழ் பிரதேசங்கள் சார்ந்து பல விடயங்களை முன்னெடுத்திருக்கின்றோம். மீள்குடியேற்றங்கள் தொடர்பிலும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றோம். எமது மக்கள் சார்ந்த எமது இனம் சார்ந்த விடயங்களை எங்களால் தான் முன்னெடுக்க முடியும் என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள். எதிர்காலத்தில் அதனை மேலும் நிரூபிப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.

தற்போது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் பேசுபொருளாக இருந்து வருகின்றது. ஆனால் தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் அவசரதட்தில் முடிவெடுக்காது. ஏனெனில் நாங்கள் எமது இனத்தின், மக்களின் நிலைமைகளை மிகவும் ஆளமாக ஆய்வு செய்தே இந்த விடயத்தில் முடிவெடுப்போம். இது தொடர்பில் நாங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. நாங்கள் எமது மக்களின் கருத்துகளுக்கு ஏற்றால் போல் சில தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் செயற்படுகின்றோம் என்று தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது