மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட  கலந்துரையாடல் 

பாறுக் ஷிஹான்

மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும்  நீண்ட காலமாக நிலவி வருகின்ற   எல்லைப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் விசேட கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று (16) இடம் பெற்றது.

குறித்த விசேட கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம ஆகியோரின் ஒருங்கிணைப்பில்  இடம் பெற்றது.

இதன் போது இவ்விரு   மாவட்டங்களுக்கிடையில்   காணப்படும் எல்லைப் பிரச்சினைகள் மற்றும் காணி பிணக்குகள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் இவ்விசேட கலந்துரையாடலில்  ஆராயப்பட்டன.

 இக் கலந்துரையாடலின் போது மயிலத்தமடு மாதவனை, உகண-வெல்லாவெளி , உகண – நாவிதன்வெளி, களுவாஞ்சிக்குடி- கல்முனை,  பிரதேச பிரதேச எல்லைப் பிரச்சினைகள் கால்நடையாளர்களின் மேய்ச்சல் தரை  மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாகவும் சமூகமாக கலந்துரையாடி அவற்றை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் அரசாங்க அதிபர்களினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலும்  எல்லை பிரதேசத்தில் அடாத்தாக காணிகளை பிடித்தல்  சட்டவிரோத காணி பயிர்ச்செய்கை நிறுத்துதல் வீதிகள் அமைத்தல் காட்டு யானை பிரச்சினைகள்  தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இக்கலந்துரையாடலில்  மகாவலி அதிகார சபையினரினால் மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக இதன் போது அறிக்கை செய்யப்பட்டது.

இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் , மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான   திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந், திருமதி . நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், மகாவலி அதிகார சபையினர், காணி உத்தியோகத்தர்கள், துறைசார்  உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.