மடத்தடி மீனாட்சி அம்மனுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் வயல் காணி கொள்வனவு!
( வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு எண்பது லட்சம் ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் வயல் காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்தின் முதலாவது கும்பாபிஷேகத்தின் போது ஊர் ஊராய் சேகரித்த பணத்தில் கும்பாபிஷேகம் முடிந்த பிற்பாடு எஞ்சிய 80 லட்ச ருபாய் நிதியில் இக் காணி கொள்வனவு செய்யப் ப்பட்டது .

இந்த காணி உரிமை பத்திரம் கைமாறுகின்ற நிகழ்வு கல்முனை பிரபல சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது .

ஆலய பரிபாலன சபையின் தலைவர் கி.ஜெயசிறில், பரிபாலன சபையின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, செயலாளர் த.சண்முநாதன், பொருளாளர் அ.சுந்தரராஜன், உபதலைவர்களான கே.சண்முகநாதன், ரி.நேமிநாதன் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் முன்னிலையில் காணி பத்திரம் கைமாறப்பட்டது .

காரைதீவு பிரதான வீதியில் விபுலானந்தா முச்சந்தி அருகில் உள்ள திரு திருமதி வேற்குமரன் நிஷாந்தினி தம்பதியினரிடமிருந்து இக் காணி கைமாறப்பட்டது.

எஞ்சிய நிதியை இவ்வாறு நிரந்தர சொத்தாக சேர்த்த நிருவாகத்தினரின் முன்மாதிரி பக்தர்கள் பொதுமக்கள் மத்தியில் பெரு வரவேற்பு பெற்று இருக்கின்றது . பாராட்டும் தெரிவிக்கப்பட்டுவருகிறது.
இக்காட்சி அம்மனுக்கு நிலையான சொத்து என்பதோடு அதிலிருந்து வருகின்ற குத்தகை பணம் மாதா மாதம் அம்மனுக்குரிய பூஜை செலவுகள் ஏனைய செலவுகளுக்கு பயன்படும் வண்ணம் இதுஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதன் முதலில் 2022 இல் இடம்பெற்ற கும்பாபிஷேகத்திற்காக அம்பாறை மாவட்டத்தின் ஆறு பிரதான தமிழ் கிராமங்களுக்கு சென்று நிதி சேகரிப்பு செய்தபோது சுமார் 2 கோடி ரூபாய் நிதியை மக்கள் வாரி வழங்கினார்கள்.

கும்பாபிஷேக சங்காபிஷேகம் ஏனைய செலவுகள் நிறைவடைந்ததும் எஞ்சியிருந்த 80 லட்சம் ரூபாயை அம்மனுக்கு சொத்தாக்கி இருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றது.