நீலையூர் சுதா எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீடு!

அபு அலா –

பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா (07) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளரும் மாகாணப் பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருமாகிய ச.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக முதல்வர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எண்ணம்போல் வாழ்க்கை இலக்கியமன்றத்தின் ஒருங்கமைப்பில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவின் வரவேற்புரையை எண்ணம்போல் வாழ்க்கை இலக்கிய மன்றத் தலைவர் எழுத்தாளர் கனக. தீபகாந்தனும், “கொத்துவேலி” நூலாசிரியர் பற்றிய அறிமுகவுரை, நூல்பற்றிய சிறப்பு நயவுரையை சமூகசேவைத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எழுத்தாளர் இரா.கி.இளங்குமுதன் மற்றும் ஓய்வுநிலை அதிபர் கவிஞர் இரா.இரத்தினசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.

சிவபாதசுந்தரம் சுதாகரனின் “நீலையூர் சுதா” எனும் புனைபெயருடன் கிராமிய மணங்கமளும் வகையில் நாட்டுப்புற வாழ்கை, நிகழ்கால நாட்டு நடப்புக்கள் என அனைவரும் ரசித்து வியக்கும் வகையிலான உயிரோட்டமுள்ள கவிதைப் படைப்புக்கள் கொண்ட இந்நூல் “கொத்துவேலி” எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.

திருமதி லலிதா சுதாகரனால் “கிடுகு வீடு” எனும் தலைப்பிலும் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்டு பெருவரவேற்பை பெற்ற “நீலையூர் சுதா”, பல ஆலய இறுவட்டுகளுக்காக பாடல்களையும் எழுதியுள்ளார்.

அம்பாரை மாவட்டத்தின் வடக்கு எல்லையின் விவசாயக் கிராமமான பெரியநீலாவணையை பிறப்பிடமாக கொண்ட “கொத்துவேலி” நூலாசிரியரான பைந்தமிழ் சுடர் சுதாகரன்
கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.