-சகா-

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.

கரைவாகுப்பற்றை இறுதியாக ஆண்ட செல்லையா வன்னிமையின் பெண்ணடி சார்பில் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் ஒன்பது பேர் இவ்வழக்கை கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

“கடந்த 400 வருடங்களாக நடைபெற்று வந்த பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு மாற்றாக நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்திலிருந்து அம்மன் சிலையை சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு கொண்டு சென்று வைப்பதற்கு பதிலாக, பிரதிவாதிகளால் சட்டவிரோதமாக அனுமதியின்றி நட்பிட்டிமுனையில் கட்டப்பட்ட புதிய ஆலயத்திற்கு கொண்டு செல்ல பிரதிவாதிகள் தீர்மானித்துள்ளார்கள்.

இதனால் இரண்டு ஊர்களுக்கும் இடையே சண்டை இடம் பெற்று உயிர் இழப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால், இதனை தடை செய்யுமாறு கோரி இந்த வழக்கு சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழுவினர் தாக்கல் செய்யப்பட்டது..

கணேசர் ஆலய தலைவர் தம்பிராசா ரவிராஜ் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கினை ஏற்ற கல்முனை மாவட்ட பதில் நீதிபதி ஏ.எம்.எம். ரியால், இந்த கட்டாணையை வழங்கியுள்ளார் என்று, வழக்கு விசாரணையில் ஆஜராகியிருந்த பிரபல சிரேஸ்டசட்டத்தரணி ஏ. ஆர் .எம். கலீல் தெரிவித்தார்.

இந்தவழக்கு பதில் நீதிபதி எ.எம். ரியால் தலைமையில், வெள்ளிக்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது சட்டத்தரணி கலீல், அம்மன் சிலையை வெளியில் எடுக்கின்ற பொழுது சேனைக்குடியிருப்பு மற்றும் நற்பிட்டிமுனை மக்களிடையே முரண்பாடு ஏற்பட்டு அதுவே கலவரமாக மாறி, உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே இதனை தடை செய்யுமாறு கோரி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

சட்டத்தரணி கலீலின் வாதம், சத்திய கூற்று மற்றும் ஆவணங்களையும் அவதானித்த நீதிபதி “இடைக்கால தடை உத்தரவு ஒன்று வழங்கப்படும் வரை நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற அம்மன் சிலையானது பிரதிவாதிகளோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களாலோ அல்லது வேற வேறெவராலுமோ அங்கிருந்து அகற்றப்படக்கூடாது என்றும், குறித்த அம்மன் சிலையானது நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசரா ஆலயத்திலேயே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

இக்கட்டாணை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு அதாவது 15 ஆம் திகதியில் இருந்து 27ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.

நீதிமன்ற கட்டாணையை கட்டுப்பட்டு நடக்க தவறும் பட்சத்தில் அதாவது மீறுகின்ற பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக தண்டிக்கப்பட நேரிடும் என்றும் மாவட்ட பதில் நீதிபதி றியால் கட்டளையிட்டுள்ளார்.