வெளிநாட்டில் பணிபுரிவோருக்காக அரசாங்கம் இப்படி திட்டமிடுகிறது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு செல்வோரின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ஒன்றை வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (06.09.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊடாகவே நாட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கின்றது. இலங்கை மத்திய வங்கி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி 2022ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட 1610 மில்லியன் டொலர் வருமானத்திற்கு மேலதிகமாக 2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 2823 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது என தெரிவித்தார்.