முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வுப் பணி ஆரம்பமான நிலையில் மாலை 03.30 மணியளவில் அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டது.

குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப் பணியுடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களுடன் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப் பணியைத் தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.00 மணியளவில் தொடங்கிய குறித்த அகழ்வுப் பணி, மாலை 03.30 மணி வரையில் இடம்பெற்றது.

இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப் பணியின் பிரகாரம் 13 மனித எச்சங்கள் இனங்காணப்பட்டன. அவை தடயவியல் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா, தடயவியல் பொலிஸார் உள்ளிட்டவர்களால் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புக்களுக்கு மத்தியில் இன்று அகழ்வுப் பணி இடம்பெற்றது.

You missed