வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான பொதுச்சபை அமைக்க  கலந்துரையாடல்  

நூருள் ஹுதா உமர்

அம்பாரை மாவட்ட லாகுகல பிரதேச செயலகத்தின் பாணம தெற்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான பொதுச்சபை ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் 2023.06.09ம் திகதி காலை 10.00 மணிக்கு லாகுகலை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லகுகலை பிரதேச செயலாளர் ந.நவநீதராஜா தெரிவித்தார்.

நம்பிக்கை பெறுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 102 இற்கு அமைய பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவின் படியும் மற்றும் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தினால் கோப்பிடப்பட்டுள்ள வழக்கின் 2023.05.23ம் திகதிய விசாரணையின்போது நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படியும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கு அமையவும் உகந்தை மலை முருகன் ஆலயம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இக்கூட்டம் இடம் பெறவுள்ளது.

உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பொதுச் சபையில் அங்கம் வகிக்க ஆர்வமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தொடக்கம் அம்பாரை மாவட்டத்தின் பாணம வரையிலான பிரதேசத்தில் நிரந்தரமாக வசிக்கும் இந்து மதத்தை பின்பற்றும் பொது மக்கள் தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களோடும் இந்து சமயத்தவரது பண்பாட்டு விழுமியங்களோடும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியுமென லாகுகல பிரதேச செயலாளர் ந.நவநீதராஜா மேலும் தெரிவித்தார்.

You missed