தங்கம் கடத்தியதால் அலி சப்ரி ரஹிம் MP கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிமிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமான கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் சட்டவிரோதமான முறையில் 3 கிலோ 397 கிராம் எடையுடைய தங்கத்தை கொண்டு வந்த நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினரின் பயணப் பையிலிருந்து ஒரு தொகை கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு 91 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சந்தை பெறுமதி 4.2 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர், விமான நிலையத்தில் ஐந்து மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், சுங்கத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

டுபாயிலிருந்து இன்று முற்பகல் 9.45 அளவில் வருகைத் தந்த விமானத்தின் மூலம், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.

இவ்வாறு வருகைத் தந்த பாராளுமன்ற உறுப்பினர், விசேட பிரமுகவர்கள் பிரவேசிக்கும் நுழைவாயிலின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமது கிடைக்கப் பெற்ற தகவலொன்றுக்கு அமையவே, பாராளுமன்ற உறுப்பினர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.