(கனகராசா சரவணன்)

திருகோணமலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (24) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டுஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பனவற்றின் இணை ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பேரின்பராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலில் மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், க.இராஜேந்திரன், சிவில் செயற்பாட்டாளர் அருட்தந்தை கே.ஜெகதாஸன், ஊடகவியலாளர்கள் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட அமரர் சுகிர்தராஜனின் திருவுருவப் படத்திற்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் மற்றும் அருட்தந்தை ஆகியோரால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், வருகை தந்தோர் அனைவராலும் மலர்தூவி, சுடரேற்றி இரண்டு நிமிட அமளன அஞ்சலி செலுத்தப்பட்டு, அஞ்சலியுரைகளும் இடம்பெற்றது.