உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான போதிய பாதுகாப்பை தற்போது கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து வழங்க முடியாது என பொலிஸ் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

தேர்தல் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் துறையின் மொத்த ஊழியர்கள் 85,000 பேர் என்றாலும், அவர்களில் 60,000 பேரை மட்டுமே தேர்தல் பணிகளுக்காக விடுவிக்க முடியும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த தேர்தலில் 78,000 பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலைமை காரணமாக ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளை மீள அழைத்து தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ள ஏற்பாட்டின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பாதுகாப்புக்காக பாதுகாப்புப் படையினரை அழைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

அரசியல் சட்டப்பிரிவு 104 சி(1)ன்படி தேர்தலுக்கு பொலிஸார் பாதுகாப்பு அளிக்க கடமைப்பட்டுள்ளதால் தேர்தல் பாதுகாப்புக்கு பொலிஸாரின் அதிகபட்ச பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.