அனைவரையும் கொன்று விட்டீர்கள்- சம்பந்தன்; வாய் திறக்காத மஹிந்த; மலையக பிரச்சினையை சொன்ன மனோ; வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்த நசீர் அஹமட்: நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? –

நன்றி -தமிழ் பக்கம்

தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஜனவரி 31ஆம் திகதிக்குள் செயற்படுத்த ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் கட்சிகள் இன்று ஜனாதிபதியிடம் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தன.

இனப்பிரச்சினை தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடந்தது.

மாலை 6 மணி தொடக்கம் 7.30 மணிவரை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தை தலைமை தாங்கிய ரணில் சில நிமிடங்கள் உரையாற்றினார். இனப்பிரச்சினை தீர்வுக்கான அவசியத்தை தெரிவித்தார்.

பின்னர், அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோர் உரையாற்றினர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரச தரப்பினால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர்கள் விபரித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலி சப்ரி தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் உள்ள சட்ட விவகாரங்களை விபரித்த விஜேதாச ராஜபக்ச, அரசியல்கைதிகளை படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர், தமிழ் கட்சிகள் ஏற்கெனவே கூடி எடுத்த முடிவை தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு, அபகரிக்கப்பட்ட காணிகள் மீளளிக்கப்பட வேண்டும்.

அதிகார பகிர்வு சம்பந்தமாக அரசியலமைப்பு மற்றும் சட்டங்களிலுள்ள அம்சங்களை உடனடியாக அமுலாக்குவதுடன், மகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும்.

உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திரரீதியாக வாழ்ந்த வந்த வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகார பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் பொறுப்புக்கூறல் விடயங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.

இதில், காணி, அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரங்கள் உடனடியாக கையாளலாம் என சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இவை தொடர்பான ஆக்கபூர்வமாக நடவடிக்கைகள் ஜனவரி 31ஆம் திகதிக்குள் செயற்படுத்த ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

அரசியலமைப்பில் உள்ள, 13ஆம் திருத்தத்தை முதலில் அமுல்படுத்த வேண்டுமென்றும் தெளிவாக வலியுறுத்தினர்.

பின்னர் உரையாற்றிய ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் இதை ஆதரித்தனர். 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி விட்டு, பின்னர் படிப்படியாக முன்னோக்கி நகரலாமென்றனர்.

1987ஆம் ஆண்டு முதல் 13வது திருத்தத்தை தான் வலியுறுத்தி வருவதாகவும், கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்வர்கள் அதை ஆதரித்து வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இரா.சம்பந்தன் உரையாற்றிய போது, “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்கு தெரியும். ஆனால், என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு, பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்“ என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களின் இனப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும், 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தி படிப்படியாக முன்னேறலாம் என தெரிவித்ததுடன், மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிற்கும் தீர்வு காணப்பட வேண்டுமென்றார்.

அதிகார பரவலாக்கல் விவகாரத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித்தும் ஆதரித்து உரையாற்றினார். 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்த வேண்டுமென குறிப்பிட்ட சஜித், ஒருமித்த நாட்டுக்குள் ஒற்றையாட்சிக்குள் (ஏக்கிய ராஜ்ஜிய) தீர்வை காண்போம் என்றார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்த வேண்டுமென்றார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் அதே சமயம், அபிவிருத்தி பணிகளும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றார்.

அமைச்சர் ஹாபீர் நசீர் அஹமட், வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக கருத்து தெரிவித்தார். மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்த முடியாதென்றும், தேர்தல்களை நடத்தி உடனடியாக வடக்கு கிழக்கை இணைக்கப் போகிறீர்களா என கேட்டு, இணைந்த வடக்கு கிழக்கில் தாம் துன்பப்பட்டதாக கூறினார்.

இதை தொடர்பில் எந்த தெளிவான கருத்தையும் ஜனாதிபதி ரணில் தெரிவிக்காத போதும், சாதகமாக அணுகலாம் என்ற சாரப்பட பதிலளித்ததுடன், தமிழ் தரப்புடன் விரைவில் கலந்துரையாடல் நடத்துவதாக தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்ச, செயலாளர் காரியவசம் ஆகியோர் கருத்து தெரிவிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.