“வனிதாபிமானா” கிழக்கு மாகாணத்துக்கான விருதைப் பெற்றார் ஜெனிதா பிரதீபன்

சிரச tv மற்றும் NDB வங்கி இணைந்து வருடாந்தம் வழங்கி வரும் “சிறிலங்கா வனிதாபிமானா” விருதினை கிழக்கு மாகாணம் சார்பாக திருமதி ஜெனிதா பிரதீபன் பெற்றுள்ளார்.

சமூக சேவைக்காக இந்த விருதை பெற்றுள்ள ஜெனித்தா காரைதீவு பிரதேச செயலகத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமைபுரிகின்றார்.

பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இவர் பெண்கள் சிறுவர்களுக்கான உரிமைகள் தொடர்பாகவும் குரல் கொடுத்து வருபவர் ஆவார்.

இலக்கியத் துறையிலும் பல்வேறு பதிவுகளை தடம் பதித்து வரும் ஜெனிதா கல்முனை நெற் ஊடக வலையப்பின் பரிமாணம் பத்திரிகையின் மங்கையர் பிரிவின் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.

கொழும்பில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் சமூக சேவைக்காக இலங்கையின் 9 மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒன்பது நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மோகன் ஜெனிதா. தொடர்பாக…..
. மோகன் , பிறேமானந்தினி ஆகியோரின் நான்கு பிள்ளைகளில் மூத்த பிள்ளை இவர். மத்தியமுகாம்-2 , நாவிதன்வெளியை பிறப்பிடமாகவும் நற்பிட்டிமுனை -2 , கல்முனையில் வசிப்பிடமாகவும் கொண்டிருக்கிறார். ஆரம்பக்கல்வியை கமு/கமு/ சிவசக்தி மகாவித்தியாலயத்தில் கற்றார்.. இந்த பாடசாலையில் முதன் முதலாக க.பொ.சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுள் இவரும் ஒருவர். அதில் சிறந்த பெறுபேறு பெற்ற முதல் மாணவியும் இவரே. உயர்கல்வியை கமு/ கமு/ உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கலைத்துறையில் கற்றார். அதில் மூன்று ஏ சித்தி பெற்றார். தமிழ் மொழியிலும் ஏ சித்தி கிடைத்தது. படிக்கும் காலத்திலேயே கட்டுரைப் போட்டிகளில் பங்கு பற்றினார். பரிசில்களும் சான்றிதழ்களும் பெற்றிருக்கிறார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் சிறப்புக் கற்கையை மேற்கொண்டு முதல் வகுப்பில் சித்தி பெற்றார். ஒரு வருடம் தற்காலிக உதவி விரிவுரையாராக பணி புரிந்தார். பல்கலைக்கழக காலத்தில் மேடைப்பேச்சுக்கள் பலவற்றில் பங்குபற்றினார். அத்தோடு கவிதை, கட்டுரைகளை பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளுக்கு எழுதினார். வாழ்த்துப்பாக்கள் பல எழுதியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு இருந்து 2018 ஆம் ஆண்டு வரை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து இவர் அதனைத்தொடர்ந்து காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று வரை கடமை புரிந்து வருகிறார். அப்பா ஒரு விவசாயி. இவர் குடும்பத்தில் மூத்த பிள்ளை. அப்பா பத்திரிகை வாசிப்பார். எழுத்து துறையில் இவராகவே ஆர்வத்துடன் நுழைந்திருக்கிறார்.

தற்போது கல்முனைநெற் பத்திரிகையின் மங்கையர் பகுதிக்குரிய ஆசிரியராக இருக்கின்றார். சமூகவியல் எனும் தலைப்பில் 13 கட்டுரைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியீடு செய்திருக்கிறார். இதற்கு நூலக ஆவணமாக்கல் திணைக்களம் நிதி அனுசரணை வழங்கியது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதற்கான தண்டனைகளும் அடங்கிய கையேடு இரண்டினை வெளியிட்டுள்ளார். பட்டிமன்றங்கள், கவிரயங்குகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்.

சமூகவியல் எனும் புத்தகத்திற்கு ஜனாதிபதி கையொப்பமிட்பட்ட சான்றிதழ் கிடைக்கப்பெற்றது
சிறுவர்கள் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், மது ஒழிப்பு,பெண்கள் உரிமைகள், தலைமைத்துவம், மனித உரிமைகள், நல்லிணக்கம், பால்நிலை சமத்துவம் போன்ற தலைப்புக்களில் வளவாளராகவும் பங்குபற்றிக்கொண்டிருக்கின்றார்.

கல்முனை பிராந்திய மனித உரிமை குழு அங்கத்தவராகவும், வேள்வி அமைப்பின் செயலாளராகவும், அம்பாரை வலுவிழப்புடன் கூடிய நபர்ளுக்கான வலையமைப்பின் பொருளாளராகவும், அம்பாரை பெண்கள் வலையமைப்பின் செயலாளராகவும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயலணியின் சமூக நல்லிணக்க குழுவின் செயலாளராகவும், சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் நல்லிணக்க குழுவின் உறுப்பினராகவும் செயற்படுவதுடன் பல்வேறு சமூகப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஜெனிதா பன்முக ஆளுமையுடையவர்.
இந்தியாவின் புண்ணை,லண்டன் காற்றுவெளி,அவுஸ்திரேலியாவின் உதயசூரியன் போன்றவற்றிலும் இவரது கவிதைகள் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.
அத்தோடு பிறை டிவி,கெப்பிட்டல் டிவி டாஸ்சபா டிவி போன்றவற்றில் கலந்துரையாடல்களில் பங்கு கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்:
சம்மாந்துறை மஷூறா