மட்டக்களப்பு மக்களுக்கான ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமொன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்ய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

106 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா நேற்று (12) திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப சுகாதார பராமரிப்பு துறையின் துறைத்தலைவரும் உருவாக்குனருமான வைத்திய கலாநிதி கே.அருளானந்தம் தனது வரவேற்புரையில் நிலையத்தின் நான்கு பிரதான தொழில்பாடுகள் பற்றி விரிவாக விளக்கமளித்திருந்தார்.

ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் நோய் முகாமைத்துவம், சவுக்ய நிலை முன்னேற்றம் மற்றும் நோய் தடுப்பு, கற்பித்தல் மற்றும் பயிற்சி அத்துடன் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை புகுத்தல் எனும் பெரும் பகுதிகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்திருந்தார்.

தொடர்ந்து பீடாதிபதி கலாநிதி ரீ.சதானந்தன் தனதுரையில் இன்றைய நாள் ஓர் சிறப்பான நாள் இந்நிலையத்தை உருவாக்கியத்தில் பலரின் பங்களிப்புள்ளது, அவர்கள் அனைவரும் பெருமைப்படும் வண்ணமாக இந்த மையம் பணியாற்றவுள்ளது எனவும் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் இதனால் பெருமை அடைகின்றதெனவும் குறிப்பிடடார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தனதுரையில் இது ஓர் நீண்ட கனவு நனவான சந்தர்ப்பம் எனவும் சமூகபராமரிப்பில் சேவை, கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்சசி எனும் பெரும் பகுதிகளை உள்ளடக்கி இம்மையத்தின்மூலம் வழிப்படுத்தப்படுவதில் இலங்கை பல்கலைக்கழகங்களில் நாமே முதன்மையானவர்களாக மாறியுள்ளோம் என குறிப்பிடடார்.

மேலும் இம் முழுமையான பராமரிப்பு மையம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடையாளமாக இருந்து பேராசிரியர்களின் சமூகம்சார் சிந்தனைகளை செயல்வடிவமாக்கும் ஓரிடமாக செயற்படும் என்பதில் ஐயமில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், பதில் உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.கருணாகரன், முன்னாள் மட்டக்களப்பு மாவடட செயலாளர் திருமதி.காலமதி பத்தராஜா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், உதவி பிரதேச செயலாளர் திருமதி.சுதர்ஷினி, அயல் கிராமங்களின் தலைவர்கள், சவுக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் துறை தலைவர்கள் விரிவுரையாளர்கள், கல்விசாரா அலுவலர்கள், மாணவர்கள் என பலரும் பங்குபற்றி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலைகள், வைத்திய அதிகாரிகள் பிரிவுகளின் சுகாதார பராமரிப்பு அலகுகள், கிராமமட்ட தாய் சேய் பராமரிப்பு நிலையங்கள் என்பவற்றையும் தாண்டி கிழக்குப் பல்கலைக்கழகம் முழுமையான ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவையை சமூகத்திற்கு வழங்குவதென்பது மட்டக்களப்பு மக்களுக்கு கிடைத்துள்ள பொருங்கொடையாகவே தாம் பார்பதாக நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

You missed