நோர்வே வெளிவிவகார பிரதானியுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழிச் சந்திப்பு இடம் பெற்றது!

17 ஆவணி 2022 மதியம் 15:30 அளவில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரி ஆன் கிளாட் அவர்களுடனான முக்கிய சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆறு தமிழ் கட்சி தலைவர்களுடன் நடைபெற்றது. இதில் மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிவஞானம் ஸ்ரீதரன், கோவிந்தன் கருணாகரம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாந்தா அவர்கள் கலந்துகொண்டு இருந்த பொழுதிலும் உடல்நிலை காரணமாக கூட்டத்தில் தொடர்ந்தும் பங்குபெற்ற முடியவில்லை.

தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. சமாதான நடவடிக்கைகளில் நோர்வே ஆர்வத்தோடு கடந்த காலங்களில் பங்கு பற்றி இருந்த பொழுதிலும் 2009 யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிகளில் அவர்களின் பங்களிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து தமிழ் மக்களிடமிருந்து எட்டி இருப்பது போன்ற ஒரு தோற்றம் அவதானிக்கப் படுவதாக தமிழ் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

அதற்கு பதில் அளித்த ஆன் கிளாட் அவர்கள், சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுப்பதற்கு தாங்கள் சர்வதேச சமூகத்தால் முன்னிலைப்படுத்த பட்டதாகவும் அது தோல்வியடைந்த பின்னர் நீதிப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக வேலைத்திட்டங்களில் சர்வதேச சமூகத்தோடு தாங்கள் தொடர்ந்து பயணிப்பதாகத் தெரிவித்தார்.

ஐநாவில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப் படுத்தப் படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது எந்த கருத்து தமிழ் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை என்ற பல அவசரமாா பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது. நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இலங்கை அரசியலில் குறைவாகவே காணப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீீள வேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஆதரவை தமிழ்த் தரப்புகள் நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதற்கு தயாராக உள்ள போதிலும் அரசு தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை கொள்வது நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு தாங்கள் தயாராகிக் கொண்டு இருப்பதனால், தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை நோர்வே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு அவற்றை ஐநாவில் பிரதிபலிக்கும் வகையில் அங்கத்துவ நாடுகளுக்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் ஆன் கிளாட் உறுதி அளித்தார்.

சுரேந்திரன்
தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்