இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அவர்கள் இருப்பிடத்தை தெரியப்படுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த இடத்திற்கு வந்த இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அத்துடன், அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட 10 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கைது செய்யப்பட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், அவர்கள் இருக்கும் இடம் தெரியப்படுத்த வேண்டும். பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அத்துடன், இராணுவத் தளபதிக்கும் செய்தி அனுப்பியுள்ளேன.

எவ்வாறாயினும், சம்பவங்கள் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.