( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்த விசேட செயலமர்வு இன்று காலை அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
”சமூக நல்லிணக்கத்திற்கான பொறுப்புள்ள டிஜிட்டல் சமூகம் – கட்டம் 2″ (Responsible Digital Society for Social Cohesion- Phase 2) எனும் செயற்திட்டத்தின் கீழ் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சர்வோதயம் அமைப்பு, யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மூத்த மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்புப் பணிகளை நுஜா ஊடக அமைப்பு மேற்கொண்டிருந்தது.
இச்செயலமர்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரும், சட்டத்தரணியுமான நஹீஜா முசாபிர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, செயலமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
செயலமர்வின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்ட ரவீந்திரன் விதுர்சன், நவீன டிஜிட்டல் உலகில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.
அத்தோடு,பல்லின சமூகங்கள் வாழும் அம்பாறை மாவட்டத்தில், இனங்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் பொறுப்புள்ள செய்தி அறிக்கையிடலை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் மேலும் விளக்கப்படுத்தினார்.
இங்கு. அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரும், சட்டத்தரணியுமான நஹீஜா முசாபிர் உரையாற்றுகையில்,
தற்கால டிஜிட்டல் யுகத்தில் போலிச் செய்திகளும், வெறுப்புப் பேச்சுகளும் மிக வேகமாகப் பரவி, சமூக ஒற்றுமையைக் குலைக்கும் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இத்தகைய சூழலில், செய்திகளை வெளியிடும் போது ஊடகவியலாளர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டும் செயற்பட வேண்டும்.
வெறுப்புப் பேச்சுக்கு எதிரான கூட்டுச் செயற்பாடு
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளை (Hate speech) இனங்கண்டு, அவற்றை முறியடிப்பதில் ஊடகவியலாளர்களின் பங்கு இன்றியமையாததாகும்.
சமூகத்தில் பதற்ற நிலையைத் தணித்து, அமைதியை நிலைநாட்டக்கூடிய நடுநிலையான ஊடகவியலின் அவசியத்தையும் அவர் தனது உரையில் விவரித்தார்.













