எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகம் தனது நூற்றாண்டு விழாவை (1926–2026) முன்னிட்டு களுத்துறையில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கையின் பொதுச் சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதிலும், நோய் தடுப்பு சேவைகளை வலுப்படுத்துவதிலும் தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகம் கடந்த 100 ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்பு பாராட்டத்தக்கது என அவர் தெரிவித்தார்.
முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு, தொற்றா நோய்களின் பரவல் மற்றும் காலநிலை மாற்றத்தால் உருவாகும் புதிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் திறமையான சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவது அவசியம் என்றும், நவீன சுகாதார உட்கட்டமைப்பு, ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் அரசாங்கம் தொடர்ந்தும் முதலீடு செய்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

