நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் நோக்கிலான செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த 2026 ஜூன் 30 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களின் ஆவணங்களை எண்ணிமப்படுத்துதல் தொடர்பான இக் கலந்துரையாடலானது, கௌரவ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஒத்துழைப்புடன், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் வழிகாட்டலில் புதிய மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூலக நிறுவனத்தின் பிரதமர் நிறைவேற்று அலுவலர் ரஞ்சுதமலர் நந்தகுமார், மற்றும் நூலக நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார மத்திய நிலையங்களில் கடமையாற்றும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர் கே. எம். றிழா அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நூலக நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அலுவலர் றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்கள், நூலக நிறுவனத்தினை அறிமுகம் செய்ததுடன் மட்டக்களப்பு பிராந்திய ஆவணப்படுத்தல் செயற்றிட்டம் மற்றும் அதன் அவசியம் ஆகியவை தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கலந்துரையாடலில் பங்கேற்ற உத்தியோகத்தர்களுக்கிடையில் குழுச்செயற்பாடு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதில், மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாக எல்லைகளுக்குள் உடனடியாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்கள், அவற்றை அடையாளங்கண்டு ஆவணப்படுத்தும் வழிமுறைகள், மற்றும் ஆவணப்படுத்தலின் நேர்மறையான விளைவுகள் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டதுடன், பல காத்திரமான பதில்களும் கலந்துரையாடல்கள் மூலம் அடையப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக மாவட்டத்தின் வரலாறு, பண்பாடு, மரபுரிமை. சமூக வாழ்வியல் பாரம்பரிய அறிவு, நாட்டார் கலைகள், மத மற்றும் கலாசார மரபுகள், முக்கிய ஆளுமைகள், கல்வி பொருளாதாரம், சுற்றுச்சூழல், கிராம வரலாறுகள், தொல்பொருள் மற்றும் பாரம்பரியச் சின்னங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய விரிவான ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு நூலக நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற உத்தியோகத்தர்களை நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுடன் தொடர்ச்சியாக இணைத்துக்கொள்வது தொடர்பாகவும், ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பங்களிப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.





















