தெனியாய பகுதியில் சில பாடசாலைகளில் முதலில் பதிவான மூளைக்காய்ச்சல் நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தியத்தலாவ பகுதியில் 28 பேரும், வெலிமடை பகுதியில் 13 பேரும், ரிகில்லகஸ்கட பகுதியில் 25 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் நோய் பரவி வருவதாகவும், எனினும் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் ஆழ வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நோயின் அறிகுறிகள் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும், சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் நோயாளர்கள் குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
உணவு, நீர் மற்றும் நேரடி தொடர்புகள் மூலம் இந்த நோய் பரவ வாய்ப்புள்ளதால், தற்போதைய மழைக்கால சூழலும் எதிர்வரும் வெசாக் பண்டிகை தானசாலைகளும் நோய் பரவலுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

