அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகைகள்
( வி.ரி.சகாதேவராஜா)
புனித நோன்புப் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று (21) சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.
புனித நோன்புப் பெருநாளுக்கான தொழுகையும் பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது. இதன் போது மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கத்தினையும் நிகழ்த்தினார். இதில் ஆண்-பெண் இருபாலாருக்குமான இத் தொழுகைக்கு கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வு அமைதியான சூழலில் சிறப்பாக நடைபெற்றதுடன், மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




