அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பிரதமர் சந்திப்பு
அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர் இன்று பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பிரதமருடன் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, யாழ் சித்த மருத்துவ பீடத்தில் கடந்த 47 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய கட்டிடங்கள் மற்றும் விடுதி வசதிகள் விஸ்தரிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற வேண்டும். கல்வி அமைச்சு உடனடி மற்றும் நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், சித்த மருத்துவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படாத நிலை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சித்த, ஆயுர்வேத, யூனானி மருத்துவங்களை விரிவாக அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தெரிவித்தனர்.
தற்போது நாட்டில் 2011 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியோர் முதலாக 2,045 வேலையற்ற சித்த, யூனானி, ஆயுர்வேத மருத்துவர்களும் 1,187 உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்யாத பட்டதாரிகளும் இருப்பதாக கூறினர். அதேவேளை, ஐந்து மருத்துவ பீடங்களில் மொத்தமாக 2,708 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மட்டும் 104 மாணவர்கள் கடந்த ஒரு தசாப்த காலத்தில் பாடநெறியை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் தற்போதைய பதவிக்காலம் முடிவடையும் 2029ஆம் ஆண்டுக்குள், வேலைவாய்ப்பற்ற மருத்துவர்கள் எண்ணிக்கை 6,800 ஆகவும், கல்வி பயிலும் மாணவர்கள் 2,800 ஆகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இதன் அடிப்படையில், மொத்தம் சுமார் 9,600 பேருக்கான தெளிவான தேசிய கொள்கையை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் வலியுறுத்தினர்.
சுகாதார அமைச்சின் செயலாளர் 2025 ஒக்டோபர் 9ஆம் திகதி, இது தொடர்பாக ஆரோக்கியமற்ற பதிலை எழுத்து மூலம் அறிவித்திருந்ததாகவும், இந்நிலை தொடருமானால் 2013ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதி இப்பாடநெறியை தேர்வு செய்தவர்கள் அரச வேலையைப் பெற 2033ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எதிர்கால மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் மற்றும் யோசனைகளை பிரதமரிடம் முன்வைத்ததாகவும், இது தொடர்பாக குழுவைன்றை நியமித்தி ஆராயுமாறும் கோரினர்.
CP, Autism, குழந்தையின்மை, விட்டமின் குறைபாட்டு நோய், புற்றுநோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றுக்கான தீர்வுகள் சித்த, ஆயுர்வேத, யூனானி மருத்துவங்களில் உள்ளதாக அவர்கள் கூறினர்.
ஆனால், இந்த மருத்துவ சேவைகளை பெற மக்கள் பல பேருந்துகள் மாற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதுடன், மலைநாட்டுப் பகுதிகளில் சித்த வைத்தியசாலைகள் இல்லையெனவும் சுட்டிக்காட்டினர். மலைநாட்டில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கும் ஒரு சித்த வைத்தியசாலை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
உள்ளகப் பயிற்சியின் போது தமது சிரேஸ்ட மருத்துவர்களிடமிருந்து பல திறன்களை கற்றுக்கொண்ட போதிலும், 8 வருடங்களுக்கு மேலாக வேலை இன்றி இருப்பதும் 40 வயதில் வைத்தியராக நியமனம் பெறும் சூழ்நிலை உருவாவதால், அறிவு மற்றும் நடைமுறை அனுபவத்தில் இடைவெளி ஏற்படுகிறது; இதனால் நேரடியாக மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மருத்துவம் என்பது தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய பணியெனவும் அதை இடைநிறுத்தி மீண்டும் புதிதாக ஆரம்பிப்பது முட்டாள்தனமானது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
தற்போதைய அரசு 303 நியமனங்களை வழங்கியதை பெரிய சாதனையாக முன்வைப்பது தவறானது என்றும், ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பியதை சாதனை என கூற முடியாது என்றும் அவர்கள் விமர்சித்தனர். முந்தைய அரசின் காலத்தில் 600க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு 604 நியமனம் வழங்கப்படவிருந்த நிலையில், தற்போதைய அரசு அதில் வெறும் 303 நியமனங்களையே வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
கடந்த ஒன்றரை வருடங்களாக, சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதியிடம் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட ஐந்து நிமிட நேரமாவது வழங்குமாறு கோரியும், இதுவரை எந்த சந்திப்பும் கிடைக்கவில்லை என்றும், பலமுறை அமைச்சுகள் மற்றும் அதிகார அலுவலகங்களுக்கு சென்று திரும்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் வேலைவாய்ப்பு பிரச்சினைக்காக மட்டுமல்ல; மக்களின் சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே தங்கள் குரலை உயர்த்தி வருவதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.
2024ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் நடைபெற்ற சந்திப்பில், சித்த, ஆயுர்வேத, யூனானி மருத்துவங்களுக்கான மாணவர் சேர்க்கையை குறைக்க வேண்டும் என்ற யோசனையை அவர் மறுத்ததாகவும், நாட்டில் இந்த மருத்துவங்களுக்கு பெரும் தேவை உள்ள நிலையில், ஆயுர்வேத திணைக்களமும், 9 மாகாணத்தின் 9 சுதேச மருத்துவ திணைக்களங்களும் சுகாதார அமைச்சும் இதனை அலட்சியமாக கையாளுகின்றன என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டிற்கு பயனுள்ளதாக தங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான தெளிவான, நடைமுறைசார் யோசனைகள் தங்களிடம் இருப்பினும், அவற்றை விவாதிக்க சுகாதார அமைச்சர் அல்லது ஜனாதிபதி நேரம் வழங்காததால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். கடிதங்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
இலங்கையில் 74.1% மக்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சித்த, ஆயுர்வேத, யூனானி மருத்துவங்கள் மூலம் மரண வீதத்தை குறைக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மதவாச்சியில் இயங்கும் சிறுநீரக ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையை உரிய முறையில் அபிவிருத்தி செய்தால், இலங்கையின் 50% சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியும் எனவும், ஆனால் அதற்கும் சுகாதார அமைச்சின் கவனம் இல்லை என்றும் குற்றம்சாட்டினர்.
தற்போது சுதேச மருத்துவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை சுமார் 2587 ஆக உள்ள நிலையில், அதற்கு இரட்டிப்பு அளவிலான மருத்துவர்கள் வேலை இன்றி இருப்பதாகவும் தெரிவித்தனர். மக்களுக்கு சேவை செய்ய ஒரு மேசையும் ஒரு நாற்காலியும் இருந்தால் போதும்; அதற்கும் வாய்ப்பு வழங்கப்படாததே தங்களின் வேதனை என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.



























