கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா?

காரைதீவு பிரதேச சபை அமர்வில் தவிசாளர் பாஸ்கரன் காட்டம்!

( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவுப் பிரதேசம் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள உக்கிரமான கடலரிப்பினால் கடற்கரைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை அரசாங்கம் கண்டு கொள்வதாக இல்லை. அரச பிரதிநிதிகள் அருகிலுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்கின்றார்களே தவிர காரைதீவுக்கு வருகிறார்களில்லை. ஏனிந்த பாரபட்சம்?

இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் கேள்வி எழுப்பினார்.

காரைதீவு பிரதேச சபையின் புத்தாண்டின் முதல் அமர்வும் ஏழாவது அமர்வும் இன்று (13) செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

கடலரிப்பினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் கடலோர பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலவரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய தேசிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்க, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவீர, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் மாகாண பொறியியலாளர் எம். துளசிதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரச அதிகாரிகள்  கல்முனை கடற்கரைப் பகுதிகளுக்கு விஜயம் செய்தததாக ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். 

இதன் மூலம் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அபாயத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததாக ஊடகங்களில் வந்தது.

எனவே கடலரிப்புக்கான கல்லணை அரசபணியில் காரைதீவு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா?

 அரசின் கண்மூடித்தனமான அலட்சியமா?

காரைதீவு இன்று கடுமையான கடலரிப்பின் முன் நிராதரவாக நிற்கும் நிலையில், கடலரிப்பை கட்டுப்படுத்த அரசால் மேற்கொள்ளப்படும் கல்லணை (கற்கள் இடும்) பணிகளில் காரைதீவு முற்றாக புறக்கணிக்கப்பட்டுவருவது கடும் அரசியல் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அண்மைக் காலங்களில் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் போன்ற பகுதிகளில் அரசியல் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் அணிவகுத்து வந்து அவசரமாக கற்கள் இடும் பணிகளை முன்னெடுத்துவரும் போது, அதே கடலோர வரிசையில் அமைந்துள்ள காரைதீவு மட்டும் ஏன் அரசின் பார்வைக்கு அப்பால் தள்ளப்பட்டிருக்கிறது? என்ற கேள்வி இன்று மக்கள் மத்தியில் உரத்த குரலாக ஒலிக்கிறது. 

அவர்கள் இங்கு வரும்போது எம்மை அழைப்பதில்லை. காரைதீவு பெரிய பாலம் திருத்த வேலை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு அழைக்கவில்லை. அதுபோல தொடர்ந்து புறக்கணிப்பு காட்டப்பட்டிருக்கிறது.

காரைதீவு கடற்கரைப் பகுதியில் வீடுகள், விளையாட்டு மைதானங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுச் சொத்துகள் அனைத்தும் கடலால் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டுவரும் நிலையில் இத்தகைய புறக்கணிப்பு தேவையா?

அனைத்து மூவின குடிமக்களுக்கும் சம உரிமை, சம பாதுகாப்பு என்று அரசியல் மேடைகளில் முழங்கும் சமகால அரசியல் தலைமைகள், காரைதீவு வந்தால் மட்டும் ஏன் மௌனமாகிவிடுகின்றன? கடலரிப்பு இனத்தைப் பார்க்குமா? மொழியைப் பார்க்குமா? ஆனால் அரசின் நடவடிக்கைகள் மட்டும் இனத்தையும் மொழியையும் பார்த்து செயல்படுகின்றனவா? என்ற கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனவே இனியாவது நீதியாக செயற்படுங்கள் என்றார்.

மேலும் உறுப்பினர் பர்ஹான் உட்பட உறுப்பினர்கள் பலரும் கடலரிப்பு தொடர்பாக பலவித கருத்துகளைக் கூறினர்