சிறப்பாக நடைபெற்ற கனடா -இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் 13வது ஆண்டு விழா
கனடாவில் இயங்கும் இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் தனது 13வது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக 27 டிசம்பர் 2025 சனிக்கிழமை நடத்தி முடித்துள்ளமை கனடா தமிழ்ச் சமூகத்தின் முதிர்ச்சியையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்தது. இது வெறும் ஆண்டு விழா அல்ல. வணிகச் சாதனைகளையும் சமூக அக்கறையையும் ஒன்றிணைத்த ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது.
வர்த்தகத்துறையில் சாதனை படைத்த ஏழு பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர். தனிநபர் வெற்றியை சமூக மதிப்பாக மாற்றும் முயற்சியாக இந்த விருது வழங்கலைப் பார்க்கப்பட வேண்டும். இலாபம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் ஒழுக்கம், சமூக நலம் ஆகியவற்றை மதிப்பீட்டின் அடிப்படையாக எடுத்துக் கொண்டது சங்கத்தின் பரிணாமத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வகை கௌரவிப்புகள் இளம் தலைமுறைக்கு வணிகம் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதது என்ற தெளிவான செய்தியைக் கூறுகின்றன.
இந்த விழாவின் மையமாக அமைந்தது மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 10 குடும்பங்களுக்கு வீடு அமைக்கும் திட்டத்தின் பங்களிப்பு. வெறும் வாய் வீச்சு உரை யோடு நிற்காமல் திட்டமாகவும் செயல்பாடாகவும் தாயகப் பற்றை முன்னெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மேலும் ஏழு வர்த்தகர்கள் அபிமானிகள் அரங்கத்திற்கு நேரில் வந்து இந்தத் திட்டத்திற்கு தமது ஆதரவு தெரிவித்தது சமூக நம்பிக்கையும் கூட்டு பொறுப்பும் இன்னும் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
மட்டக்களப்பு மண்ணில் இப்பணி ஆரம்பிப்பதற்கு ஊன்றுகோலாக இருந்தவர் திரு விசு கணபதிப்பிள்ளை அவர்கள். அவர் செய்தும் பணியையும் நாம் பாராட்ட வேண்டும்.
இதேவேளை ஈழநாடு பத்திரிகையின் ஊடாக முல்லைத்தீவு பாரதி இல்லத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவி ஊடகமும் சமூகப் பணியும் ஒன்றிணையும் அரிய எடுத்துக் காட்டாகும். போர் பாதிப்புகளால் பின்தங்கிய பகுதிகளை மறக்காமல் கவனத்தில் எடுத்தது சங்கத்தின் தேசிய உணர்வை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இந்தச் சாதனைகளுக்கிடையில் சில எதிர்பார்ப்புகளும் முன் வைக்கப்பட வேண்டியவை. வீடமைப்புத் திட்டம் தொடர்ச்சியான கண்காணிப்பு, வெளிப் படைத்தன்மை பயனாளிகளின் பங்கேற்பு ஆகியவற்றுடன் நடைமுறைப்படுத்தப் பட்டால் அதன் தாக்கம் மேலும் ஆழப் படும். அதேபோல் தாயகத்தில் கல்வி, தொழில் பயிற்சி, சிறு தொழில் தொடக்க உதவி போன்ற நீடித்த திட்டங்களும் இணைக்கப்பட்டால், வறுமை ஒழிப்பின் வட்டம் விரிவடையும் எனலாம்.
மொத்தத்தில், இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் கனடா தனது 13 வது ஆண்டு விழாவினூடாக வணிக வெற்றியும் தேசியப் பொறுப்பையும் ஒரே மேடையில் இணைந்து நிற்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இது பாராட்டுக்குரியதுடன் பின்பற்றத்தக்க முன் மாதிரியும் ஆகும். இந்தப் பாதையில் தொடர்ந்தும் பயணித்து தாயகத்திற்கான அக்கறையை திட்டங்களாக மாற்றும் சங்கமாக இது திகழ வாழ்த்துக்கள்.
விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்கள் வணிகமும் சமூக சேவையும் இணைந்த வாழ்நாள் சாதனையாளராக திரு சுகுமார் கணேசன் அவர்களும் கணக்கியல் துறையில் தொழில்முறை சிறப்புத் திறன் விருதினை திரு வேல்.புருசோத்தமன் அவர்களும் இசைத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை மெகா ரியுனஸ் அரவிந்தன் மகேசன் அவர்களும் சிறநத சமூக சேவையாளர் விருதினை திருமதி ஜோதி பிரபாகரன் அவர்களும் கணக்கியல் நிதித்துறை சிறப்பு சேவை விருதினை திரு சின்னத்துரை மகேந்திரநாதன் அவர்களும் சிறந்த தொழில்முனைவோர் விருதினை திரு பொன்னையா வில்வரத்தினம் சிறந்த சமூகத் தோழமை விருதினை திரு அருண் குலசிங்கம் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
அதேபோன்று வீட்டுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் திரு திருமதி வேல்.புருசோத்தமன் இணையர்கள் திரு திருமதி யுகநீதருபன் இணையர்கள் தி திருமதி கணா இணையர்கள் திரு திருமதி நரேந்தரா இணையர்கள் திரு திருமதி கிருஷ்ணகோபால் இணையர்கள் திரு திருமதி தனம் இணையர்கள் திரு திருமதி ஜெயம் இணையர்கள் அரங்கத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.
சங்கத்தின் வளர்ச்சிக்கு ஆயராதும் தளராதும் உழைக்கும் தலைவர் சோம.சச்சிதானந்தன் உட்பட அனைத்து நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.
T.K. பரமேஸ்வரன் – ஆசிரியர் ஈழநாடு











