வங்கிக் கடனைப் பெற்றுக்கொள்ள தங்க நகைகள் மற்றும் நிலங்களை பொறுப்பு வைப்பது போன்று பனை மரங்களை பொறுப்பு வைத்து வங்கிக் கடனைப் பெறும் திட்டம் ஒன்றை இவ் வருட இறுதிக்குள் பனை அபிவிருத்திச்சபை அறிமுகப்படுத்த இருப்பதாக பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

பனை மரம் பண மரமாக மாற்றமடையப் போகின்றது. காணிகளில் உள்ள பனை மரங்களை அவசரப்பட்டு அழிக்க வேண்டாம். வங்கிக் கடனுக்கு பொறுப்பாக பனை மரங்களை ஈடு வைக்கும் திட்டம் ஒன்றை பனை அபிவிருத்திச்சபை தயாரித்து வருகிறது. இவ்வருட இறுதிக்குள் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்.

கற்பகதரு என முன்னோரால் அழைக்கப்பட்ட பனை மரத்திற்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது. பனைசார்ந்த கைப்பணிப் பொருட்கள், பனை சார்ந்த உணவுகளுக்கு புலம்பெயர் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்புக் கிடைக்கின்றது.அத்துடன் மேற்குலக நாடுகளில் பனம் சாராயம் உள்ளிட்ட மதுசாரங்களுக்கு நல்ல சந்தைவாய்ப்பு உள்ளது.

இந்த நிலைமையில் ஒரு பனை மரம் மூலம் வருடம் ஒன்றிற்கு சராசரியாக ஒரு மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற முடியும். அந்த அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள 15மில்லியன் பனை மரங்களையும் உச்ச அளவில் பயன்படுத்தி எமது மாகாணங்களின் அபிவிருத்திக்குத் தேவையான நிதியைப் பெற முடியும்.

எந்த ஒரு பயிர் மூலமும் வருடத்திற்கு ஒரு ஏக்கரில் ஒரு மில்லியனை ஈட்ட முடியாது. ஆனால் ஒரு பனை மரம் மூலம் அந்த வருமானத்தைப் பெற முடியும்.

பனையை பாதுகாப்பதன் ஊடாக வேலைவாய்ப்பினை அதிகரிக்க முடியும், சுற்றுச்சூழலைப் பேண முடியும், நாட்டிற்குத் தேவையான அன்னிய செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும்.

பனை மரத்தை வைத்து வங்கிக் கடன் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது பனம் துறையில் புதுப் புரட்சி ஒன்று உருவாகும்.

பொறுப்பு வைக்கும் பனை மரத்தில் பனங்கள், கருப்பனி உள்ளிட்ட உற்பத்திகளை மேற்கொள்ளும் பட்சத்தில் வங்கிக் கடனுக்கான வட்டியை பனை அபிவிருத்திச்சபை செலுத்தும் திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி பனம் தொழிற்துறையை மேலும் ஊக்குவிக்க யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. பனை சார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் ஊடாக வருமானம் கிடைப்பதால் வட்டியைச் செலுத்துவது இலகுவான விடயம்.

இவ் வருட இறுதிக்குள் இந்தத் திட்டம் அமைச்சரவை ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

இதனூடாக பனை மரத்தின் அழிவுக்கு காரணமாக இருப்பவர்கள் மனங்களில் பனையை சொத்தாக கருதி பாதுகாக்கும் மனநிலையை ஏற்படுத்த முடியும். அத்துடன் பனம் தொழிற்துறைக்கும் புத்துயிர் கிடைக்கும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.