உலகில் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை! மட்.கல்லடிப்பாலத்தில் நாளை திறப்பு விழா!

(  வி.ரி.சகாதேவராஜா)

 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் 15 அடி உயர முதல் கருங்கல் சிலை நாளை (17) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது.

 அடிகளாரின் துறவற  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு  சுவாமி விபுலானந்தர்  நூற்றாண்டு விழா சபையின்  பூரண ஏற்பாட்டில் ,மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில், இந்திய மாமல்லபுரத்தில் செதுக்கிய கருங்கல்லாலான  சுவாமி விபுலானந்த அடிகளாரின் திரு உருவச்சிலை நிறுவப்படுகிறது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ முன்னிலையில்  சுப வேளையில் கடந்த ஜனவரியில் அடிக்கல் நடும் நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றமை தெரிந்ததே. 

 அடிகளாரின் சிலையானது தனி ஒரு     கருங்கல்லால்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   இது இந்தியாவில் மாமல்லபுரத்தில்   திறமை வாய்ந்த தமிழ் நாட்டு சிற்பிகளால்   செதுக்கப்பட்டது .

அடிகளாரின்  சிலை  அமைப்பு   செயற்     குழுவின்    தலைவரான    மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான  தேசபந்து  முத்துக்குமார் செல்வராஜா  தலைமையில் சிலையமைப்பு பணிகள் நடைபெற்று நாளை அவர் தலைமையில் சிலைதிறப்பு விழா நடைபெறுகிறது.

நாளை முழுநாள் விழாவும் மட்டக்களப்பு நூற்றாண்டு விழாச் சபைத்தலைவர் கே. பாஸ்கரன் தலைமையில்  நடைபெறவுள்ளது .

இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் சிலையைத் திறந்து வைக்கிறார்.

உலகில், சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு தனிக் கருங்கல்லில் சிலை எழுப்பப்படுவதும், கல்லடிப்பாலத்தோடு நெருங்கிய தொடர்பு வரலாறுடைய மண்ணின் மைந்தர் சுவாமிக்கு கல்லடிப் பாலத்தில் சிலை எழுப்பப்படுவதும்  இதுவே முதல் தடவையாகும்.

இது தொடர்பாக- மட்டக்களப்பு

விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் தலைவர் க.பாஸ்கரன் தெரிவிக்கையில்..

முத்தமிழ் வித்தகரும் உலகில் முதலாவது தமிழ்ப்  பேராசிரியருமான சுவாமி விபலானந்தருக்கு  15 அடி உயரமான கற்சிலை  நாளை 17ஆம் திகதி பிற்பகல் 4.30  மணிக்கு  . மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

 முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் மகர யாழை ஆய்வு செய்து  அதற்கு உருவம் கொடுத்து உலகிற்கு தந்தவர் .அவரால் மகரயாழ் இன்றும் உயிர் வாழ்கிறது.

அது மட்டும் இன்றி உலகில் முதலாவது தமிழ் பேராசிரியராக பதவி பெற்று தமிழ் மொழிக்கும்  இனத்திற்கும் நன்கு சேவையாற்றியவர். குறிப்பாக தமிழர்களின் மத்தியில் இருக்கின்ற குல சாதி மத வர்க்க பேதங்களை அறவே ஒழிக்க பாடுபட்டவர் .இதற்கு மேலாக ஆன்மீகத்தில் துறவியாகி ஆன்மீக ஞானத்தை வழங்குவதில் அவர் காட்டிய உற்சாகம், வழிவகைகள் அளப்பெரியன. இப்படியான ஒரு மகான்  வாழ்நாளில் மறக்க முடியாதவர் அவரின் ஞாபகார்த்தமாக  15 அடி உயரமான கற்சிலையை  கல்லடி பாலத்திற்கு அருகாமையில் திறந்து வைப்பதில் விபுலானந்தரின் நூற்றாண்டு விழா சபை மிகவும் சந்தோசம் அடைகிறதென்றாறார்.

 சிலை நிர்மாணக் குழு தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் பொதுச் செயலாளர் ச.ஜெயராஜா ஆகியோரும் கருத்து கூறினர்.