உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் ஜுன் 02ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.!
( வி.ரி.சகாதேவராஜா)
பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பிரசுரித்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் 2025.06.02ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.
அதற்கமைய உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் முதல் கூட்டம் ஜூன் 2ஆம் திகதி கூட வேண்டும்.
339 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு கடந்த 2025.05.06ஆம் திகதியன்று நடைபெற்றது.
இத்தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி 265 அதிகார சபைகளையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 35 அதிகார சபைகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 14 அதிகார சபைகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 அதிகார சபைகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முறையே 3 அதிகார சபைகளையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 அதிகார சபைகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 1 அதிகார சபையையும் பெற்றுக்கொண்டன. 4 சுயேட்சைக் குழுக்கள் தலா 1 அதிகார சபைகளை கைப்பற்றிக்கொண்டன.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் கடந்த புதன்கிழமை (7) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 75,589 பேர் போட்டியிட்டனர்.
2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செலவு விபரத்திரட்டை உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.