(  வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளான திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கும் இடையிலான 31 வது வருட பொன் அணிகளின் சமர் ( Battle of the Gold) கிரிக்கெட் போட்டியில் சிவானந்தா அணி வெற்றிவாகை சூடி இந்த ஆண்டுக்கான சாம்பியன் பொன் கிண்ணத்தை தட்டிக் கொண்டது.

இப் போட்டி திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (4) சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

திருமலை கோணேஸ்வரா அதிபர் மகேந்திரராஜா பிரகாஷ் வழிகாட்டலில் அணித் தலைவர்  கஜேந்திரன் கார்த்திகேயன் சக வீரர்களுடன் களமிறங்கினார்.

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா அதிபர் சபாபதிப்பிள்ளை தயாபரனின் வழிகாட்டலில்  அணித் தலைவர்  தயாபரன் கவிஷன் சக வீரர்களுடன் களமிறங்கினார்.

.பிரதம அதிதியாக கல்விஅமைச்சின் உயர்கல்வி,தொழில்துறைக்கல்வி பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.எல்.குணதிலக கலந்து சிறப்பித்தார்.

போட்டியில் முதலாவது துடுப்பெடுத்தாடிய சிவானந்தா அணி 50 ஓவரில் 09 விக்கட் இழப்புக்கு 247 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோணேஸ்வரா அணி 50ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து ஆக 215 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. எனவே, 32 ஓட்டங்களால் சிவானந்தா அணி வெற்றி பெற்றது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் தோற்றுவித்து அதிபராக இருந்த இருபெரும் பாடசாலைகளுக்கிடையிலான இப் போட்டி கடந்த 1985 ஆம் ஆண்டு  சிநேகபூர்வமாக ஆரம்பமானது.

கடந்த 30 வருடங்களில் திருகோணமலை மட்டக்களப்பு என இரு இடங்களிலும் மாறிமாறி நடைபெற்ற போட்டிகளில் இரு அணிகளும் தலா 15 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன.

31 வது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றதில் சிவானந்தா அணி வெற்றி பெற்றதன் வாயிலாக 16 வெற்றிகளை பெற்று சமரில் முன்னணியில் திகழ்கிறது.

அதேவேளை கடந்த மூன்று வருடங்களாக தொடர் வெற்றியை பெற்று வந்த சிவானந்தா அணி நான்காவது போட்டியிலும் இம்முறை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவானந்தா அணி பயிற்றுவிப்பாளர் தில்லை நாயகம் ரிஷாந் மற்றும் அணித் தலைவர் கவிஷன் வீரர்கள் அனைவரும் பாராட்டப்பட்டார்கள்.

கோணேஸ்வரா இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர்களான சி.தண்டாயுதபாணி எஸ்.பத்மசீலன் உள்ளிட்ட ஆறு அதிபர்கள்,

இரு பாடசாலைகளினதும் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் இந்த மாபெரும் விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.