பிராந்திய மக்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார் வைத்திய நிபுணர் கலாநிதிவேந்தன்
(வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 68 மில்லியன் (6.8 கோடி) ரூபா பெறுமதியான அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தலைமையில் அங்கு விஜயம் செய்தபோது, ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் எலும்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் மருத்துவர் பி. கலாநிதிவேந்தன் ஆகியோரிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்திற்குப் பிறகு தேசத்தில் முதன்முதலாக இந்த நவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி, கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் ஊடாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனையில் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் எலும்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் பத்திரநாதன் கலாவேந்தனின் இந்த நவீன கருவியின் முக்கியத்துவம் பற்றி கேட்டபோது,
“இது பொதுவாக முழங்கால், தோள் பட்டை, கை மூட்டு, கணுக்கால் உள்ளிட்ட மூட்டுகளில் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக கண்டறிந்து, குறைந்த சேதத்துடன் குறைந்த வலியுடன் சத்திர சிகிச்சை செய்ய உதவும் கருவியாகும்” என்று தெரிவித்தார்.
லத்தீன் மொழியான ஆர்த்ரோஸ்கோபி என்றால் தமிழில் “மூட்டு என்பதாகும்”.
மூட்டுகளில் ஏற்படும் உபாதைகளை ஆர்த்ரோஸ்கோபி மூலம் கண்டறிந்து, நுண்துளை வழியாக கேமரா மற்றும் கருவிகளை உட்புகுத்தி சத்திர சிகிச்சைகளை துல்லியமாக மேற்கொள்ளவும் இதனால் முடியும் என்றார்.
இந்த அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி இந்த பிராந்தியத்தில் வாழும் மக்களுக்கு ஓர் அரிய வரப்பிரசாதம் எனக் குறிப்பிட்டார்.
இதைப் பெறுவதற்கு அதிதீவிர முயற்சி எடுத்த பணிப்பாளர் மருத்துவர் குண. சுகுணன் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

