செல்லையா பேரின்பராசா.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியநீலாவணையில் பதினொரு மில்லியன் ரூபாவில் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் நேற்று வெள்ளிக் கிழமை மாலை 19.06.2026 கிழக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கமைய கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்.சரவணமுத்து நவநீதனால் நாடா வெட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர். கலாநிதி. ஜயந்த லால் ரத்னசேகரவும்  ,கௌரவ விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவும், சிறப்பு விருந்தினராக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்  ரி. ஜே. அதிசயராஜ் விசேட அதிதிகளாக  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூ.கஜேந்திரன்  சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தௌபிக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இந் நிகழ்வின் பிரதம அதிதியான கலாநிதி ஜயந்தலால் ரத்தினசேகர இக் கலாசார மண்டபத்தினை பராமரித்து பேணிப் பாதுகாக்கும் உரிமத்தினை பெரியநீலாவணை தமிழர் கலாசார ஒன்றியத்தின் செயலாளரும் உடகவியலாளருமான என்.சௌவியதாஸன்  தலைமையிலான குழுவினரிடம் சம்பிரதாய பூர்வமாக கையளித்தார்.


இந் நிகழ்வில் தமிழ் சிங்கள கலாசாரத்தை பிரதிபலிக்கும் நடன ஆற்றுகைகள் அரங்கேறியதுடன் பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் பேன்ட் வாத்திய இசை வழங்கி அதிதிகளை மகத்தான முறையில் வரவேற்றனர்.