(கட்டுரை – மின்மினி மின்ஹா)

ஒரு நகரத்தின் விளையாட்டு வளர்ச்சியை அளவிட வேண்டுமெனில், அங்குள்ள விளையாட்டு மைதானங்கள், பயிற்சி மையங்கள், உடற்கல்வி வசதிகள் மற்றும் இளைஞர்களுக்கான பொது உள்கட்டமைப்புகளைப் பார்ப்பது போதுமானது. அந்த வகையில், சம்மாந்துறை பிரதேசத்தின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்குள் அமைந்துள்ள நீச்சல் தடாகம், இன்று பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் பயிற்சி மையமாகவும், குடும்பங்களின் ஓய்வு நேரச் சந்திப்பிடமாகவும், பிரதேச சபைக்கு வருமானம் ஈட்டிய பொதுச் சொத்தாகவும் விளங்கிய இந்த நீச்சல் தடாகம், தற்போது செயலிழந்த நிலையில் இருப்பது அபிவிருத்தி திட்டங்கள் எவ்வாறு பராமரிப்பின்றி வீழ்ச்சியடைகின்றன என்பதற்கான உதாரணமாக மாறியுள்ளது.

வரலாற்றுப் பின்னணி:

ஒரு தேசியத் திட்டத்தின் உள்ளூர் பலன்
2006 ஆம் ஆண்டு அந்நாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் இதற்கான போதுமான காணி ஒதுக்கப்படாததால், திட்டம் ஆரம்பத்தில் சிக்கலில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் 2007 காலப்பகுதியில் மறைந்த அமைச்சர் எம்.ஐ. அன்வர் இஸ்மாயீல், குளியாப்பிட்டியிலிருந்த இதேபோன்ற விளையாட்டு தொகுதியைப் பார்வையிட்டபோது, அதன் தேவையையும் பயனையும் உணர்ந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.எம். நசீர் அவர்களின் ஒத்துழைப்புடன் 14 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு, சம்மாந்துறையில் இத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டது.

நிர்வாக மாற்றங்களும் பராமரிப்பு பொறுப்பும்
ஆரம்பகட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழ் பராமரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. பின்னர் 2012 ஆம் ஆண்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகநியமனம் செய்யப்பட்ட கௌரவ. எப். பாரீஸ் முஹம்மட் அவர்களின் கடின முயற்சியினாலும், நிர்வாக ரீதியிலான செயற்பாடுகளினாலும் அந்நாள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நெளஷாட் அவர்களிடம் கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தினால் இத்தொகுதி ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின் பராமரிப்பு, அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை சம்மாந்துறை பிரதேச சபை மேற்கொண்டு வந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

வருமானமும் பயன்பாடும்:

இருந்த நிலையிலிருந்து செயலிழப்பு வரை
உள்ளூர் தகவல்களின் படி, இந்த நீச்சல் தடாகத்தை மாதந்தோறும் சராசரியாக 1,000 பேருக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் மாதத்திற்கு சுமார் ரூ.1,50,000 வருமானமும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வளவு பயன்பாடு கொண்டிருந்த நிலையிலும், 2026 ஜனவரி 10 ஆம் திகதியுடன் நீச்சல் தடாகம் முற்றிலும் செயலிழந்தது என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இளைஞர் நீச்சல் வீரர்கள், பள்ளி மாணவர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலை:

கோரிக்கை சென்றது, நடவடிக்கை எப்போது?

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர். கௌரவ. எம்.எல். அப்துல் கபூர்.(QS) அவர்களை இது விடயமாக நேரடியாக சந்தித்து கருத்து வினவிய போது….

ஆளுநர் நேரில் பார்வை –

நீண்டநாளாக நிலவி வந்த மக்கள் குறைகளைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர். கௌரவ. ஐ.எல்.எம். மாஹிர் சார் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் – பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பாராளுமன்ற பிரதிநிதி கௌரவ.ஏ. ஆதம்பாவா அவர்களை நேரடியாக விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு அழைத்து வந்து நிலைமைகளை விளக்கியிருந்தார். மேலும் நீச்சல் தடாகத்தின் சேதநிலை, பராமரிப்பு குறைபாடுகள், வளாகத்தின் பல்வேறு குறைகள் ஆகியவை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அறிகிறேன் என்றார்.

மேலும் பிரதேச சபை பிரதிநிதி எம்.எல்.அப்துல் கபூர்(QS) அவர்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், எமது சபையின் தவிசாளர் கௌரவ. ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் செயலாளர் யூ.எல்.ஏ. மஜீத் இணைந்து, சபையின் தீர்மானத்துடன் கூடிய கோரிக்கையை கிழக்கு மாகாண ஆளுநரின் திருகோணமலை அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இப்பிரதேச இளம் விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் எதிர்கால விளையாட்டு வளர்ச்சிக்காக இத்தடாகத்தை உடனடியாக சீரமைப்பது அவசியம் எனும் விடயத்தினை 2026.06.09 இல் இடம்பெற்ற 5வது சபையின் 12வது கூட்ட அமர்வின் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு எமது மதிப்புக்குரிய தவிசாளர். கௌரவ ஐ.எல்.எம். மாஹிர் சார் இத்தடாகத்தின் மீள் செயற்படுத்தும் வகையில் சபையின் செலவுகளில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும், தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார்.

மக்கள் எதிர்பார்ப்பு:

நீச்சல் தடாகம் மட்டும் அல்ல, எதிர்காலம்
இந்த நீச்சல் தடாகம் ஒரு சாதாரண கட்டமைப்பு அல்ல. அது: இளைஞர்களின் விளையாட்டு கனவுகளுக்கான மேடை,
நீச்சல் திறமைகளை கண்டறியும் பயிற்சி மையம்,
பொதுமக்கள் பயன்பாட்டு வளம்,உள்ளூராட்சி வருமான மூலாதாரம்,சம்மாந்துறையின் வளர்ச்சி அடையாளம்
எனப் பல பரிமாணங்களைக் கொண்டது.

இந்த நீச்சல் தடாகம் ஏன் செயலிழந்தது?

பராமரிப்பு நிதி எங்கு சென்றது?,
வருமானம் இருந்தபோதும் சீரமைப்பு ஏன் தாமதமானது?,
இப்போது அறிவிக்கப்பட்ட கோரிக்கை நடைமுறைக்கு வருமா? இவை அனைத்திற்கும் மக்கள் தெளிவான பதிலை எதிர்பார்க்கின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பில், இந்த நீச்சல் தடாகத்தை விரைவாக சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே சம்மாந்துறை மக்களின் ஒருமித்த கோரிக்கை.

சீரமைப்பு நிறைவடைந்தால், சம்மாந்துறையில் நீச்சல் விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பு உருவாகும். இளைஞர்களின் திறமைகள் மலரவும், எதிர்கால தேசிய வீரர்கள் உருவாகவும் இந்த தடாகம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டிய நேரம் இது.