நவநீதன்
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதன்முறையாக வெசாக் பண்டிகை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலக நிர்வாகம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது. பௌத்த மக்களால் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படும் வெசாக் தினம், புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் புனித நாளாகக் கருதப்படுகிறது.
கடந்த 05 ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், நீண்ட நேரம் நேரடியாக மக்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கி தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
மேலும், கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், சமூர்த்தி தலைமையக முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டு மக்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கி உற்சாகமூட்டினர்.
நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், CEOs, OESs மற்றும் பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் ஆர்வத்துடன் பங்களித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது









